வாரத்தின் 6 நாட்கள் மாங்கு மாங்கு என்று வேலை செய்து விட்டு வாரத்தில் கிடைக்கும் ஒரு நாளில் என்ன செய்யலாம் என்று யோசிப்போம். தூரமாக ட்ரிப் போகும் அளவு நேரம் இல்லை. ஆனால் இந்த நகர இரைச்சலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த லிஸ்ட்.
வாரத்தின் 6 நாட்கள் மாங்கு மாங்கு என்று வேலை செய்து விட்டு வாரத்தில் கிடைக்கும் ஒரு நாளில் என்ன செய்யலாம் என்று யோசிப்போம். தூரமாக ட்ரிப் போகும் அளவு நேரம் இல்லை. ஆனால் இந்த நகர இரைச்சலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த லிஸ்ட்.
தடா நீர்வீழ்ச்சி
சென்னையில் இருந்து 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள தடா நீர்வீழ்ச்சி சென்னைவாசிகளுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பிக்னிக் ஸ்பாட். காலையில் கிளம்பி சூலூர்பேட்டை லோக்கல் ரயில் பாதையில் ஏறினால் தடாவை அடைந்து விடலாம். நண்பர்கள், குழந்தைகள் குடும்பமாக போக இடம். உங்கள் சொந்த கார் அல்லது பைக்கில் சென்றால் ஒரு லாங் டிரைவ் செய்த திருப்தியும் கிடைக்கும்.
மகாபலிபுரம்
7 ஆம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களுக்காக அறியப்பட்ட மகாபலிபுரம், சென்னைக்கு அருகில் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமான கடற்கரை கோயில், பஞ்ச ரதங்கள், கங்கையின் ஆலம்பாறை கோட்டை, புலி குகை, மகாபலிபுரம் கடற்கரை என்று பார்த்து வரலாம்.
புதுச்சேரி
சென்னையிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் செல்லும் வார இறுதி சுற்றுலாத் தலம் இந்த புதுச்சேரி நகரம் தான்! இந்திய மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தின் வசீகரிக்கும் கலவையான புதுவையில் கடற்கரை, பிரஞ்சு பாணி வீடுகள், துடிப்பான கஃபேக்கள், அமைதியான சூழல், பல்வேறு தேவாலயங்கள், கோவில்கள், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் என பொழுதைக் கழிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன.சென்னையிலிருந்து 13௦ கிமீ அமைந்துள்ள இந்த நகரத்தை 2 அல்லது 3 மணி நேர பயண தூரத்தில் அடைந்து விடலாம்.
பறவைகள் சரணாலயம்
சென்னையிலிருந்து சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயத்திற்கு புகழ் பெற்றது. அதோடு இந்திய அறிவியல் தளங்களில் முக்கியமான ஸ்ரீஹரிகோட்டா தீவும் இதன் அருகே தான் அமைந்துள்ளது. புலிகாட் இயற்கை அழகு, வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையை உங்களுக்கு பிரதிபலிக்கும். டச்சு கல்லறை, கோட்டை, காலனித்துவ கால தேவாலயங்கள், வெதுருப்பட்டு மற்றும் நெலப்பட்டு ஆகியவை இங்கு நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
வேடந்தாங்கல்
சென்னைக்கு அருகில் 70 கிமீ தொலைவில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு மிகவும் பிரபலமானது. 30 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சீசனில் 30,000 பறவைகள் இடம்பெயர்கின்றன. குழந்தைகளுக்கு இயற்கை பற்றி கற்றுத்தரவும் புதிய பறவைகளை பற்றி சொல்லித்தரவும் ஏற்ற இடமாக இருக்கும்.
'ஆயிரம் கோவில்களின் நகரம்', 'தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலைநகரம்' மற்றும் 'பட்டு நகரம்' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த காஞ்சிபுரமும் லோக்கல் ரயில் எளிதாக செல்லக்கூடிய இடம் ஆகும்.உலகப் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் பல கோயில்கள், காஞ்சிகுடில், பட்டு நெசவு செய்யும் இடங்கள் ஆகியவற்றை இங்கே காணத் தவறாதீர்கள்.
பழங்கால வரலாற்றிற்கு பெயர் பெற்ற வேலூர் ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடமாகும். விஜயநகர கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட 16 ஆம் நூற்றாண்டு கோட்டையான வேலூர் கோட்டையை பார்வையிட ஒரு நாள் முழுக்க தேவைப்படும். சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் கோட்டை வளாகத்திற்குள் ஒரு மசூதி, ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் ஒரு தேவாலயம் ஆகியவை ஒருங்கே உள்ளது. வேலூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக் கோயிலையும் நீங்கள் கட்டாயம் பார்வையிட வேண்டும்.
நாகலாபுரம்
கம்பீரமான மலைகள், பசுமையான காடு, சலசலக்கும் நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்ட நாகலாபுரம் அமைதியான சூழலில் ஒரு நாளை கழிக்க ஏற்றது. சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள இங்கு ஸ்ரீ வேதநாராயண ஸ்வாமி கோயில், ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர ஸ்வாமி கோயில், கைலாசகோனா நீர்வீழ்ச்சி, உப்பலமடுகு நீர்வீழ்ச்சி, குர்ரம்கொண்டா கோட்டை ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
திருப்பதி
இந்த இடத்திற்கு அறிமுகமே தேவையில்லை அல்லவா? ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி, நாட்டின் மிகவும் பிரபலமான யாத்திரைத் தலங்களில் ஒன்றான வெங்கடேஸ்வரா கோயிலுக்காக அறியப்படுகிறது. நீங்களும் திருப்பதி சென்று நாள் ஆகிவிட்டது என்று நினைக்குறீர்கள் என்றால், உடனே திட்டமிடுங்கள்அதிகாலையில் கிளம்பினால் இரவு வந்துவிடலாம்.