நிலவில் தூக்கத்தில் இருக்கும் லேண்டர் மற்றும் ரோவரை இன்று இயக்கிப் பார்க்க உள்ளது இஸ்ரோ. இதில் வெற்றி பெற்றால் இன்னும் அதிகப்படியான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
2008ல் முதன் முறையாக நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் 1-ஐ அனுப்பியது இஸ்ரோ. தற்போது நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான் 3 அனுப்பப்பட்டது. லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதிலிருந்து வெளிவந்த ரோவர் நிலவில் ஆய்வு செய்தது.
அதைத் தொடர்ந்து நிலவில் இரவு தொடங்கியதால் ஸ்லீப் மோடுக்கு லேண்டரும் ரோவரும் சென்றுவிட்டன. நிலவில் ஒரு பகல் என்பது பூமியின் 14 நாள் நீடிக்கும். அதே போல் இரவும் 14 நீடிக்கும். இதனால் லேண்டர், ரோவர் இருக்கும் பகுதி மைனஸ் 150 டிகிரி செல்ஷியசுக்கு கீழ் சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் குளிரை லேண்டரும் ரோவரும் தாங்கிக்கொண்டால் அதனை மீண்டும் எழுப்ப முடியும். குளிரைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் அதன் ஆயுள் முடிந்துவிடும். லேண்டர் இறங்கிய பகுதியில் இன்று மீண்டும் வெயில் வருகிறது. அடுத்த 14 நாட்களுக்கு அங்கு வெயில் இருக்கும். எனவே, இன்று லேண்டர் மற்றும் ரோவரை எழுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், "லேண்டர் தரையிறங்கிய பகுதியின் வெப்பநிலை இரவில் மைனஸ் 150 டிகிரிக்கு கீழ் சென்றுவிடும். அப்படிப்பட்ட குளிர் சூழ்நிலையில் ரோவர், லேண்டரில் உள்ள பேட்டரி, மின்னணு பொருட்கள் உள்ளிட்டவை எப்படித் தாக்குப்பிடிக்கும் என்பது கவலைக்குரிய விஷயம்தான். இந்த சூழலைத் தாங்கும் வகையில் இங்கு ஆய்வு செய்யப்பட்டுதான் அவை அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் நிலவின் சூழலில் தாக்குப் பிடித்திருக்குமா என்ற கவலையும் உள்ளது.
இன்று வெயில் வந்ததும் லேண்டர் கருவி கதகதப்பாகி, சோலார் பேனல் மூலம் பேட்டரி சார்ஜ் செய்யப்படும். இந்த இரண்டும் சரியாக நடந்தால் லேண்டர், ரோவர் என இரண்டும் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.
அவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் இன்னும் அதிக தூரத்துக்குச் சென்று ஆய்வு செய்வது சாத்தியமாகும். அப்படி நடந்தால் அடுத்த 14 நாட்கள் நிலவின் தென் பகுதியில் இன்னும் பெரிய அளவில் ஆய்வு செய்யப்படும்" என்றார். இஸ்ரோ விஞ்ஞானிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நம்பிக்கை நிறைவேறட்டும்!