Breaking News :

Monday, September 16
.

பிரேக் பிடிக்கவில்லை என்ன செய்யலாம்?


பழகிவிட்டால் எல்லா கடினமான பணிகளும் எளிதாக மாறிவிடும். அதேபோன்று தான் வாகனங்களுடைய இயக்கம் சார்ந்த விஷயங்களும். புதியதாக கார் ஓட்ட தொடங்கியவர்களுக்கு சில தயக்கங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை சமாளிப்பதற்கான திறன் இருந்தாலே போதும், நாம் சிறப்பான ஓட்டுநராக மாறிவிடலாம். மனிதர்களாகிய நாம், நம்முடைய தினசரி வாழ்க்கையை இயந்திரத்துடன் தான் நகர்த்த வேண்டியதாகவுள்ளது. காரினுடைய இயக்க பயன்பாடுகளும் இயந்திரத்தன்மை கொண்டது தான்.

 

 மனிதர்களுக்கு மனிதர்கள் தான் நம்பிக்கையானவர்கள். அதற்கு இணையான நம்பிக்கையை இயந்திரங்கள் மீது நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. அப்படி காரினுடைய இயக்கம் சார்ந்த நடைமுறைகளில் நமக்கு பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. அதில் ஒன்று, சாலையில் சென்றுகொண்டிருக்கும் கார் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்பது. புதியதாக கார் ஓட்டுபவர்களுக்கு இந்த கேள்வி அடிக்கடி எழக்கூடியதாகக் கூட இருக்கலாம். அதற்கான வழிமுறைகளை எளிதாக பார்க்கலாம்.

 

முதலில் ஓரமாக செல்லுங்கள்:

 

சாலையில் சென்று கொண்டிருக்கும் கார் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால், வாகனத்தை ஓரமாக நகர்த்துங்கள். ஒருவேளை சாலையில் போக்குவரத்து நிறுத்தம் அதிகமாக காணப்பட்டால், சாலையோரமாக செல்லுங்கள். அவ்வாறு செய்யும் போது, லேன் மாற வேண்டிய தேவை இருந்தால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். பின்னால் வரக்கூடிய வாகனங்களை கவனித்து, அவர்களுக்கு சிக்னல் காட்டிவிட்டு, பிறகு லேன் மாறுங்கள். அப்போது தான் சக பயணியும் பதட்டமின்றி வாகனம் ஓட்டிச் செல்வார்.

 

கோளாறு செய்யும் ஆக்ஸிலிரேட்டர்:

 

ரேஸ் செய்யும் பெடலை மிதித்தவுடன், அதுவிடுபடாமல் போனால் கார் அதிக வேகமாக போகும். அப்போது உடனே பிரேக் பெடலை மிதிப்பதை தடுக்கவும். ஒரீரு முறை மீண்டும் ரேஸ் பெடலை மிதிக்கலாம், அல்லது உங்களுடைய கார் பிளோர் மேட்டை சரி செய்யலாம். ஒருவேளை இந்த இரு காரணிகள் தடுப்பதாலும் கூட ரேஸ் பெடல் இயக்கத்தில் பிரச்னை ஏற்படக்கூடும்.

 

எச்சரிக்கை விடுங்கள்:

 

பிரேக் பிடிக்காமல் சாலையில் கார் செல்ல நேரிட்டால் சக பயணிகள், நடைபாதசாரிகளுக்கு சிக்னல் காட்டுவது அவசியம். அதனால் உங்களுடைய காரின் அனைத்து இண்டிகேட்டர் விளக்குகளையும் எரியவிடுங்கள். இதனால் உங்களுடைய காரின் நிலையை உணர்ந்து கொண்டு சாலையில் இருப்பவர்கள் விலகிக்ச் செல்வார்கள். இதனால் பெரும் விபத்து, உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

 

கியரை கூட்ட வேண்டாம்:

 

காரில் பிரெக் பிடிக்கவில்லை என்று தெரியவந்தால், வாகனத்தின் கியரை குறைக்க முயற்சி செய்யுங்கள். இப்படி செய்வதால் எஞ்சினில் பிரேக்கிங் ஏற்பட்டு காரினுடைய வேகம் 5 - 10 கி.மீ வரை குறையும். இது உங்களுக்கு வாகனத்தை கட்டுப்படுத்த உதவலாம்.

 

 இதன்மூலம் காரினுடைய ஆர்.பி.எம் ஏறாமல் இருக்கும். கார் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். இப்படி செய்வது மேனுவல் கியர் கொண்ட கார்களுக்கு சாத்தியமாகும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் காரில் ஆட்டோ கியர் இருந்தால், ஒரேவழி தான் உள்ளது. அவசர காலம் ஏற்படும் போது காரை மேனுவல் கியருக்கு மாற்றி பெடல் ஷிப்டர் மூலம் காரின் கியரை குறைப்பது நல்ல பலனை வழங்கும். இவ்வாறு செய்யும் போது ரிவெர்ஸ் கியர் போடக்கூடாது. அப்படி செய்தால் எஞ்சின் பாழாகிவிடும்.

 

இருக்கவே இருக்கு ஹேண்டு பிரேக்:

 

சாலையில் செல்லும் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால், உடனே ஹேண்டு பிரேக்கை போட வேண்டியது தானே என்று பலரும் யோசனை செய்வார்கள். ஒருவேளை வேகமாக காரில் சென்று கொண்டிருந்தால், ஹேண்டு பிரேக் பயன்படுத்துவது ஆபத்தில் முடியக்கூடும். எஞ்சின் பிரேக்கை பயன்படுத்தி காரின் வேகத்தை 20 கி.மீ-க்குள் கொண்டுவந்துவிட்டால் ஹேண்டு பிரேக்கை போட்டு வாகனத்தை நிறுத்துவிடலாம். 

 

ஆனால் அதிலும் சிக்கல் உள்ளது. பின்பக்க சக்கரங்களுக்காக செயல்படக்கூடியது தான் ஹேண்டு பிரேக். கார் வேகத்தை குறைத்து ஹேண்டு பிரேக் போடும் போது, அது ஸ்கிட்டாகக் கூடும். அப்போது நீங்கள் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்குவது மிக மிக அவசியம். ஒருவேளை உங்களுடைய காரில் எலெக்ட்ரானிக் ஹேண்டு பிரேக் இருந்தால், இதுபோன்ற அவசர சமயங்களில் வாகனம் ஸ்கிட் ஆகாமல் பார்த்துக்கொள்ளும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.