மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார். உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பங்காரு அடிகளார் இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 82 வயதாகிறது.
ஆன்மிகத்தில் புரட்சி செய்தவராகப் பங்காரு அடிகளார் கருதப்படுகிறார். இவரது பக்தர்கள் இவரை அம்மா என்று அன்புடன் அழைக்கின்றனர். ஆதிபராசக்தி கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை தொடங்கி ஏராளமான கல்வி சேவையையும் செய்து வந்துள்ளார். இவரது சேவையைப் பாராட்டி கடந்த 2019ம் ஆண்டு இவருக்கு பத்மஶ்ரீ விருந்து வழங்கப்பட்டது.
கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவு காரணமாக பங்காரு அடிகளார் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வீட்டில் வைத்தே அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும் அன்பழகன், செந்தில் குமார் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
பங்காரு அடிகளார் மறைவைத் தொடர்ந்து அவரது பக்தர்கள் மேல் மருவத்தூருக்கு வரத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்புக்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.