Breaking News :

Sunday, September 15
.

கண்ணனின் சிறப்பு தகவல்கள்!


1. மகாவிஷ்ணு எடுத்த 9வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.

2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழாதான் பிரசித்தி பெற்றது.

3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதே போல் கோவையில் உள்ள இஸ்கான் கோயிலிலும் வழிபாடு மிகச்சிறப்பாக நடக்கும்.

5. கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன், மாதவன், கோபாலன், கோவிந்தன், தாமோதரன், வேணுகோபாலன், கோவர்தனன், இராதா கிருஷ்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

6. கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

7. கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

8. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

9. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.

10. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

11. கிருஷ்ணரின் தாய் மாமாவான அரசன் கம்சனை வதம் செய்த போது, அவருக்கு வயது 7.

12. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர்- சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

13. கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

14. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

15. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

16. தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

17. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

18. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

19. துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.

20. கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால் பாயாசம், நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயாசம் தயாரிக்கின்றனர்.
21. குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் சிலை பாதாள அஞ்சனம் என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.

22. கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

23. சிலப்பதிகாரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.

24. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் உள்ள வேணுகோபாலன் சிலை நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று இங்கு பெருமாளுக்கு கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்களும் நடக்கின்றன.

25. மதுரை - அருப்புக்கோட்டை பாதையில் கம்பிக்குடியில் கோயில் கொண்டிருக்கும் வேணு கோபாலசுவாமி, நோயினால் துன்புறும் குழந்தைகளை தெய்வீக மருத்துவனாகக் காப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.