அயோத்தியில் இன்று முதல் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பால ராமர் கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். மேலும் காலை 6.30, மதியம் 12 மணி, இரவு 7.30 மணிக்கு என 3 வேளை ஆரத்தி நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதிலும் மக்கள் பாஸ் பெற்று பங்கேற்கலாம்.
இந்நிலையில் தான் முதல் நாளான இன்று அதிகளவிலான மக்கள் ராமரை தரிசனம் செய்ய கூடினர். இதனால் கோவிலில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அதிகாலை 3 மணி முதல் மக்கள் அதிகளவில் கூட தொடங்கினர். இவர்கள் கோவில் வளாக பகுதியில் காத்திருந்தனர். நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் என்பது தொடர்ந்து அதிகரித்தது.
காலை 7 மணிக்கு தரிசனம் தொடங்கிய நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்குள் நுழைய முயன்றனர். போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருக்கும் போலீசார் வந்து கூட்ட நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அயோத்தி ராமர் கோவிலில் காலை வேளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.