பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்தால் நான் ராஜினாமா செய்வேன் என்று முன்பு அண்ணாமலை கூறியிருந்தார். அதிமுக இல்லாத கூட்டணி அமைப்பது பற்றி அவர் தொடர்ந்து தன் விருப்பத்தைக் கட்சித் தலைமையிடம் கூறி வந்தார். அந்த வகையில் தொடர்ந்து அதிமுக தலைவர்கள் பற்றி அவர் விமர்சித்து வந்தார். இதனால் கூட்டணிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்பட்டது. தற்போது முற்றிலுமாக கூட்டணி உடைந்துள்ளது.
சென்னையில் இன்று அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் "மாநிலத் தலைமை கடந்த 20-8-2023 அன்று மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டைச் சிறுமைப்படுத்தும் வகையிலும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும் வருகிறது. இந்த சூழலில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இன்று (25-9-2023) கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் விலகிக்கொள்கிறது என்று ஏகமானதாகத் தீர்மானிக்கப்படுகிறது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை அதிமுக மற்றும் பாஜக என இருகட்சி தொண்டர்களும் வரவேற்று வருகின்றனர். நேற்று வரை அதிமுக ஊழல் கட்சி என்று தெரியாத பாஜக-வினர் இன்று அதை ஊழல் கட்சி என்று சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். அதிமுக-வினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.