தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் எண் மண், என் மக்கள் பாத யாத்திரை அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி முறிவுற்ற நிலையில் டெல்லியில் அண்ணாமலைக்கு டோஸ் விழுந்துகொண்டே இருப்பதாகக் கூறப்படுகிறது. திடீரென்று அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். பாத யாத்திரையை நிறுத்திவிட்டு அவர் டெல்லி சென்றார்.
அண்ணாமலை இல்லாமலேயே அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அதிமுக கூட்டணியை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக வி.பி.துரைசாமி கூறியிருந்தார். இந்த நிலையில் டெல்லியிலிருந்து திரும்பிய அண்ணாமலை குளோபல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவர்கள் 2 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியதால் அவர் நடைப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக குளோபல் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் 3ம் தேதி அண்ணாமலை மருத்துவ மனைக்கு வந்தார். சளி, சுவாசித்தலில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி, சோர் போன்ற காரணங்களுக்காக அவர் மருத்துவமனைக்கு வந்தார். சிடி ஸ்கேன் மூலம் அவரது நுரையீரலைப் பரிசோதனை செய்து பார்த்தோம். அதில் இடது நுரையீரலில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு மருந்து கொடுக்கப்பட்டது. அவரது உடல் நிலை சீராக இருப்பதை உறுதி செய்து அவரை வீட்டுக்கு அனுப்பினோம். ஐந்து நாட்களுக்கு மருந்து கொடுத்துள்ளோம். ஐந்து நாள் முடிந்ததும் மீண்டும் பரிசோதனைக்கு வர அறிவுறுத்தியுள்ளோம். இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஓய்வு எடுக்கும்படி கூறியுள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லிக்குச் சென்ற அண்ணாமலைக்குத் தலைமை நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தே சாதாரண சளி, தொண்டை வலிக்கு இரண்டு வாரங்களுக்கு நடைப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. வரும் நாட்களில் இன்னும் பல விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.