Breaking News :

Tuesday, April 30
.

அண்ணாமலை - நடிகை காயத்திரி ரகுராம் மோதல் - பாஜக கூடரத்தில் சலசலப்பு


அண்ணாமலை நடிகை காயத்திரி ரகுராம் மோதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதல் பெறாமல், கலை, கலாச்சார பிரிவில் நிர்வாகிகளை நடிகை காயத்ரி ரகுராம் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார்.

நான் எடுத்த முடிவில் தலைவர் உறுதியாக நிற்பார் என்று அறிக்கை வேறு வெளியிட்டார். சிறிது நேரத்தில் அவர் அறிவித்த பட்டியல் செல்லாது. பழைய நியமனங்கள் அப்படியே இருக்கும் என்று அண்ணாமலை அறிவித்தார். இதனால் அண்ணாமலைக்கும், காயத்திர ரகுராமுக்கும் இடையே திடீர் மோதல் உருவாகியுள்ளது. கட்சிக்குள் யார் செல்வாக்கானவர்கள் என்ற மோதல் உருவாகியுள்ளது.

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் கட்சியில் ஒருவரை சேர்ப்பதாக இருந்தாலும், நீக்குவதாக இருந்தாலும் அக்கட்சியின் தலைவர் அல்லது பொது செயலாளர் தான் முடிவு செய்வார். அதன் பிறகு தான் நீக்கம், சேர்த்தல் தொடர்பான அறிவிப்புகள் வரும். இதுதான் ஒவ்வொரு கட்சியிலும் இருந்து வருகிறது. ஆனால், பாஜவில் தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது  பாஜவில் கலை, கலாச்சார பிரிவு ஒன்று உள்ளது. அந்த பிரிவின் மாநில தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார். அவர் பாஜவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கலை, கலாச்சார பிரிவில் உள்ள ஃபெப்சி சிவா, நடிகர் பாபு கணேஷ், விருகை கணேஷ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, சர்மா, ரிஷி, உமேஷ் பாபு ஜெயபிரகாஷ் ஆகியோரை பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

இவர்களுக்குப் பதிலாக புதிய மாநில செயலாளர்களாக டைரக்டர் திருமலை, நடிகர் சசிகுமார் சுப்ரமணியன், கராத்தே சங்கீதா, எழுத்தாளர் ஜனனி நாராயணன், யோகா பயிற்றுவிப்பாளர் ரேகா துரைலிங்கம், தயாரிப்பாளர்கள் சுகுபோ பாண்டியன், ஹரிதாஸ், ஜனனி கிருஷ்ணமூர்த்தி, கங்காதர் ஆகியோரை நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவரே தனது பெயரில் கடிதமாக வௌியிட்டுள்ளார். அதோடு நிற்காமல், இதற்கான ஒரு விளக்கத்தையும் அவர் அறிக்கையாக தெரிவித்துள்ளார். அதாவது, புதியவர்கள் நியமிப்பதற்காக தான் மாநில தலைமையிடம் கொடுத்த பட்டியல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. தற்போது இந்த பட்டியலை மாற்றுவதில் முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.  தலைவர் அண்ணாமலை என் முடிவில் நிற்பார் என்று தெரிவித்துள்ளார்.
கட்சியில் நீக்குவதற்கும், சேர்ப்பதற்கும் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் எந்த உத்தரவையும் காயத்ரி ரகுராம் வாங்கவில்லை. ஆனால், பலரை நீக்கியும், பலருக்கு புதிதாக பதவியும் கொடுத்து விட்டு என் முடிவுக்கு பாஜ மாநில தலைவர் துணை நிற்பார் என்று மட்டும் தெரிவித்துள்ளார். கட்சியில் மாநில தலைவர் தான் அனைத்துக்கும் பொறுப்பு. அப்படியிருக்கும் மாநில தலைவரை விட வானளாவிய அதிகாரத்தை காயத்ரி ரகுராமுக்கு யார் கொடுத்தார்கள். நான் சொல்வதை அவர் கேட்பார் என்று அறிக்கையாக கொடுத்துள்ளது பெரிய அளவில் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில தலைவருக்கு மேல், காயத்ரி ரகுராம் அதிகாரம் படைத்தவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது காயத்திரி ரகுராமன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார் என்பதற்காக தலைவரின் அதிகாரத்தை தானே எடுத்துக் கொண்டு அவர் இதுபோன்ற அறிக்கை வெளியிட்டாரா என்ற கேள்விகளை மாநில தலைமை நோக்கி நிர்வாகிகள் எழுப்பத் தொடங்கினர். காயத்ரி ரகுராமுக்கு கட்சியில் பலர் கண்டனம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இதற்கு மாநில தலைவர் முற்றுப்புள்ளி வைத்து, இதுபோன்று அறிக்கை விடுத்த காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது பாஜவில் பலர் குரல் கொடுக்க தொடங்கினர்.
சில மணி நேரத்தில், தமிழக பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கலை மற்றும் கலாசார பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், அந்த பிரிவின் நிர்வாகிகள் மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டபடி இல்லாமல், கலை மற்றும் கலாசார பிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள், அதே பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி தெரிவிக்கப்படுகிறது'' என்று கூறியுள்ளார். நடிகை காயத்திரி ரகுராம் வெளியிட்ட அறிவிப்பை, அண்ணாமலை ரத்து செய்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்த பிரச்னை குறித்து இருவரும் தலைமையிடம் புகார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.    
இந்த மோதல் கட்சிக்குள் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.