உலகின் நீளமான நதி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள் பல இன்னமும் உள்ளன. ஆம், அமேசான் நதி பற்றிய வினோதமான தகவல்களை பற்றி இன்றும் பலர் அறிந்திருப்பது கிடையாது. இந்த நதியை சுற்றி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அதே போன்று எண்ணற்ற ரகசியங்களும் இந்த அமேசான் நதியை சுற்றி வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒன்று தான், அமேசான் நதியில் ஏன் பாலம் எதுவும் இன்று வரை கட்டப்படவில்லை என்கிற கேள்வி தான். இது குறித்த விரிவான தகவல்களை பார்ப்போம்.
அமேசான் நதி என்பது மூன்று வெவ்வேறு நாடுகளில் பாய்கிறது. அதாவது பிரேசில், பெரு, கொலம்பியா ஆகிய மூன்று நாடுகளில் இந்த நதி பாய்கிறது. மேலும் இந்த நதியை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மக்கள், அமேசான் கரைக்கு அடிக்கடி வருகை தருகின்றனர். இருப்பினும், இந்த நதியை கடந்து ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்ல இங்கு எந்தவித பாலமும் இல்லை.
அமேசானை விட குறுகிய ஆறுகள் கூட நூற்றுக்கணக்கான பாலங்களைக் கொண்டிருப்பதால் இது விசித்திரமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. மிக நீளமான நதியான நைல் நதியில், கெய்ரோ என்கிற பகுதியில் மட்டும் ஒன்பது பாலங்களைக் கொண்டுள்ளது. இந்த வினோதத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் மிக அடிப்படையான வாதங்களில் அமைந்துள்ளது. சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பணிபுரியும் வால்டர் காஃப்மேன் அவர்களின் கருத்துப்படி, அமேசானுக்கு பாலங்கள் இல்லை என்பதற்கான எளிய காரணம் அதற்கு எந்த ஒரு பாலமும் தேவையில்லை என்பது தான் என்று கூறுகிறார்.
அதாவது, "அமேசான் நதியில் பாலம் அமைப்பதற்கு போதுமான அழுத்தம் அங்கு இல்லை" என்று காஃப்மேன் ஒரு மின்னஞ்சலில் கூறியுள்ளார் என்று லைவ் சயின்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த நதி மக்கள்தொகை குறைவாக உள்ள பகுதிகளில் ஓடுகிறது. மேலும் இந்த இங்கு பாலம் கட்டுவதில் சில "தொழில்நுட்ப மற்றும் தளவாட சிக்கல்கள்" உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமேசான் நதிக்கு அருகில் உள்ள பகுதிகள் பாலம் கட்ட சிறந்த இடங்கள் அல்ல. அதாவது, இங்குள்ள சதுப்பு நிலம் மற்றும் மென்மையான மண் பகுதி கட்டடம் கட்டுபவர்களுக்கு ஒரு சவாலாக இருக்கும். அவர்கள் வலுவான அடித்தளத்தை கண்டுபிடிக்க ஆழமாக தோண்ட வேண்டும். முக்கியமாக அமேசானில் உள்ள சூழல் நிச்சயமாக மிகவும் கடினமான ஒன்றாக உள்ளதால் தான் அமேசான் நதி பகுதியில் இன்று வரை எந்த பாலமும் கட்டப்படவில்லை என்று காஃப்மேன் குறிப்பிடுகிறார்.
அமேசான் நதி முழுவதும் பாலங்கள் இல்லை என்றாலும், அதன் முதன்மை துணை நதியான நீக்ரோ ஆற்றில், 2011 ஆம் ஆண்டில் 'பொன்டே ரியோ நீக்ரோ' என்கிற பாலம் கட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.