சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் உடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார்.
வாடகை கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் சென்ற கார் கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே, விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி மட்டும் கிடைக்கவில்லை. இருப்பினும் இடைவிடாமல் தேடும் பணியில் காவல்துறை, ராணுவம், விமானப்படை மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் என பெரும் படை களமிறக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த 8 நாட்களாக தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
அவரின் உடலை ஸ்கூபா டைவிங் வீரர்கள் கண்டெடுத்தனர். அவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தது போல், 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் வெற்றி துரைசாமியின் உடலை மீட்ட மீட்புப் படையினர், உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் நேற்று (பிப்.13) மாலை 5 மணிக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள சி.ஐ.டி நகர், முதல் பிரதான சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
இதனையடுத்து, அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சைதை துரைசாமியின் அறக்கட்டளையில் படித்து அதிகாரியாக இருக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினி உடன், வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தர்.