Breaking News :

Friday, April 19
.

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம் - ஜெயக்குமார் சொல்கிறார்


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று (ஜூன் 27) கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கட்சியை வழிநடத்துகின்ற வகையில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

மேலும், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான முரசொலி செய்தி தொடர்பான கேள்விக்கு, " சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது. தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒரு கட்சி திமுக, அது அனைத்து தமிழர்களுக்கும் தெரியும். காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு துரோகம், கட்சத்தீவை தாரை வார்த்துக் கொடுப்பதற்கு பச்சைக் கொடி காட்டி மீனவர்களுக்கு துரோகம், முல்லைப்பெரியாறு, முள்ளிவாய்க்கால் படுகொலை, ஒன்றரை லட்சம் நமது தொப்புள்கொடி உறவுகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்றைக்கு தமிழகத்தில் யாருடைய ஆட்சி இருந்தது.

ஆதரவை இவர்கள் விலக்கிக்கொண்டால், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே போயிருக்கும். அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி ஒரு வார்த்தைக்கூட ஆட்சியை வாபஸ் பெறுவதாக சொல்லவில்லை. எனவே தமிழீழ மக்கள் திமுகவை நினைத்து கொதித்துப் போயுள்ளனர். இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என இலங்கையில் உள்ள தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழித்ததுதான் திமுக. இவர்கள் துரோகத்தைப் பற்றி பேசலாமா? துரோகத்தினுடைய மொத்த உருவமே திமுகதான்" என்று அவர் கூறினார்.

ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, " அதை உடனடியாக மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, " தொடர்ந்துவந்து துரோகத்தின் அடையாளம் என்று பார்த்தால், அண்ணன் ஓபிஎஸ்-தான் என்று கூற வேண்டும். ஏனென்றால், ஒட்டுமொத்தமாக, ஆரம்பக் காலக்கட்டத்தில் இருந்து தான் சார்ந்திருக்கின்ற இயக்கத்துக்கு செய்த துரோகங்கள், எந்தளவுக்கு அவர் துரோகம் செய்தார் என்பதற்கு நேற்றைய தினம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

எனவே துரோகம் என்பதே ஓபிஎஸ் அவருடன் உடன்பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட நிலையில், நமது அம்மாவில் அவரை எப்படி ஒரு அங்கமாக வைத்திருக்க முடியும். அதனால், நீக்கப்பட்டுள்ளது. அனைத்து கேள்விகளுக்கும் வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒருமனதான பதில் கிடைக்கும்" என்று அவர் கூறினார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.