பாஜக உடனான கூட்டணி முறிவு தொடர்பாக இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திருத்தம் ஒன்றை அதிமுக தலைமை மேற்கொண்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கூட்டணியில் இருந்து விலகல் என்று மூன்று முறை எடப்பாடி பழனிசாமி அறிவிக்க, நிர்வாகிகள் அதை வரவேற்றனர் என்று செய்தி வெளியாகியிருந்தது. தீர்மானம் தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அதிமுக தலைமை வெளியிட்டிருந்தது. அதில் பாஜக-வில் இருந்து விலகுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியது. ஒரு தீர்மானத்தைக் கூட ஒழுங்காக எழுத முடியவில்லையா என்று பலரும் கிண்டல் செய்தனர்.
இந்த நிலையில் அறிக்கையில் திருத்தம் மேற்கொண்டு புதிய அறிக்கையை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என ஏகமானதாகத் தீர்மானிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே கூட்டணியில் இருந்த விலகிய அறிவிப்பு ஆதரவாக பாஜக தலைவர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அண்ணாமலை தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்திவிட்டார் என்று மேலிட பொறுப்பாளராக இருந்த சிடி ரவி கருத்து தெரிவித்துள்ளார். அதே போல் எச்.ராஜா தொடங்கி பலரும் அதிமுக-வின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
அதே நேரத்தில் கூட்டணிக் கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜிகே வாசன் கூறுகையில், "அதிமுக - பாஜக இடையே பிரச்னைகள் களையப்பட்டுத் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்" என்றார்.