110 அடி உயர விமானம் அளவுக்கு பெரிய விண்கல் ஒன்று அதிவேகத்தில் பூமிக்கு அருகே வருவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சிறு குறுங் கோள்கள், விண்கற்கள் என விண்வெளியில் கோடி கோடிக் கணக்கில் பல்வேறு பொருட்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றனர். மிகப்பெரிய விண்கல் விழுந்துதான் பூமியிலிருந்த டைனோசர் உயிரினம் அழிந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி மீண்டும் ஆகிவிடாமல் தடுக்க கண்காணிப்பு தொடர்கிறது.
தற்போது பூமியை நோக்கி ஒரு சிறு விண்கல் மணிக்கு 24,492 கி.மீ வேகத்தில் வந்துகொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 70.5 லட்சம் கி.மீ தொலைவில் அந்த கல் பயணித்துக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதன் நீளம் 110 அடி இருக்கலாம் என்றும் 91 அடி அகலம் கொண்டதாகக் கிட்டத்தட்ட ஒரு பிரம்மாண்ட விமானம் அளவுக்கு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆபத்தா?
டைனோர் காலத்து விண்கல் அளவுக்கு இல்லை என்றாலும் இதுவும் சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால் இந்த விண்கல் பூமிக்கு மிக அருகே 2.4 லட்சம் கிலோ மீட்டர் என்ற அளவுக்கு வர உள்ளது. இதனால் பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. பூமிக்கு அருகே வரும்போது அதன் பாதையில் மாற்றம் ஏற்படலாம். எனவே, இந்த விண்கல்லும் விஞ்ஞானிகளின் கண்காணிப்பின் கீழ் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 17 ஆயிரம் அளவுக்கு விண்கல் பூமி மீது மோதுகிறது. இவை மிகச் சிறிய அளவில் இருப்பதால் அவை பூமியின் வளிமண்டலப் பகுதிக்குள் நுழையும் போதே எரிந்து காணாமல் போய் பூமிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போய்விடுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!