சிகரெட் பிடிப்பது போல் பல படங்கள். உலகில் எத்தனை பிராண்டுகள் இருக்கிறதோ தெரியாது.
ஆனால், சிகரெட் புகைக்கும் ஸ்டைல், பிராண்டுகளின் கணக்கை விட அதிக ஸ்டைல். இயல்பாகப் பிடிப்பது, ஸ்டைலாகப் பிடிப்பது, கோபத்துடன் புகைப்பது, வன்மத்துடன் புகைப்பது, சோகத்துடன் புகைப்பது, சந்தோஷத்தில் புகைப்பது, திருட்டுத்தனம் செய்துவிட்டு புகைப்பது, திருடர்களைப் பிடிக்கச் செல்லும்போது புகைப்பது, நல்லவன் தான்... ஆனால் புகைப்பது. புகைப்பதிலேயே கெட்டவன் என்று வெளிப்படுத்துவது... என ஒரு சிகரெட்டுக்குள் புகையிலை திணிப்பது மாதிரி, நடிப்பைத் திணித்து புகைத்தவர் சிவாஜியாகத்தான் இருக்கமுடியும். இதிலும் சிகரெட் புகைப்பதும், பீடி வளிப்பதும் பைப் பிடிப்பதும் எழுத தனித்தனிக் கட்டுரைகள் தேவை.
சிவாஜியின் ஆகச்சிறந்த படங்கள் ஏராளம். அதேபோல் தோல்விப்படங்களும் தாராளம். ஆனால் எந்தப் படங்களாக இருந்தாலும் அங்கே சிவாஜி பிராண்ட் லேபிள்களை ஒட்டாமல் இருக்கமாட்டார். தன் முத்திரையைப் பதிக்காமல் இருக்கமாட்டார்.
பக்கம்பக்கமாக வசனங்கள் பேசுகிற சாதுர்யமும் ஞாபக சக்தியும் உண்டுதான். ஒரு விழி உருட்டலில் காட்சியை விவரித்துவிடுவார் சிவாஜி. கழுத்தில் உள்ள ‘டை’ யை கழற்றுகிற விதத்திலேயே சட்டை பட்டனைப் போட்டுக்கொள்கிற விதத்திலேயே, தோள் துண்டை உதறிவிட்டு அணிந்துகொள்கிற விஷயத்திலேயே காட்சியின் கனத்தை நமக்குள் கடத்திவிடுகிற மிகப்பெரிய கெமிஸ்ட்ரி லேப்... நடிப்புப் பல்கலைக்கழகம் சிவாஜி கணேசன்.
அப்பாவை மதிக்கச் சொல்லுகிற படமா? சிவாஜி நடித்திருப்பார். அம்மாவுக்கு பாசம் காட்டுகிற படமா... சிவாஜி நடித்திருப்பார். தங்கை மீது பாசம், தம்பியிடம் எப்படியான பிரியம், உறவை மதிக்கும் பாங்கு, ஊரை நேசிக்கும் மனிதநேயம், பிள்ளைகளிடம் காட்டுகிற வாஞ்சை, எதிராளியிடம் காட்டுகிற திமிர், தோல்வியின் துக்க அடர்த்தி, வெற்றியின் அகல ஆழ உணர்வுகள்... என்று மூன்று தலைமுறை மனிதர்களுக்கு தன் நடிப்பால் சொல்லிக் கொடுத்த சக்கரவர்த்தி... சிவாஜி கணேசன்!