நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி?
வீடுகளில் நெகிழி பயன்பாட்டைக் குறைக்க (ஒழிக்க அல்ல) நினைப்பவர்கள், முதலில் தொடங்க வேண்டிய இடம் சமையலறைதான்.
நெகிழியோடு (பிளாஸ்டிக்) உறவிலிருக்கும் உணவுப் பொருட்களைப் பிரித்து கண்ணாடி, பீங்கான் அல்லது எவர் சில்வர் புட்டிகளில் அடைத்து வைப்பது முதல் படியாக இருக்கலாம்.
சிறு சிறு மசாலாப் பொருட்கள், எண்ணெய் போன்றவற்றுக்குக் கண்ணாடிப் புட்டிகளையும் தானியங்கள், மாவு போன்றவற்றுக்கு அவற்றுக்கேற்ற மூடியுள்ள உலோகப் பாத்திரங்களையும் பயன்படுத்தலாம்.
வெங்காயம், பூண்டு, காய்கறிகள் போன்றவற்றுக்கு பனையோலைப் பெட்டிகளையும்கூட பயன்படுத்தலாம். இன்று விதவிதமான கண்ணாடிப் புட்டிகள் சற்று மலிவாகவே இன்று சந்தைகளில் கிடைக்கின்றன.
ஊறுகாய் போன்றவற்றை வாங்கும்போது கண்ணாடிப் புட்டியில் வாங்கினால் அவற்றையே மறு உபயோகம் செய்ய முடியும். ஒரே நேரத்தில் இவற்றைச் செய்ய முடியவில்லையென்றாலும் ஒவ்வொரு மாதமும் சிறிது சிறிதாக மாற்றி மொத்தமாக நெகிழிக் கண்டெய்னர்கள் இல்லாதவாறு சமயலறையை மாற்றி விடலாம்.
உப்பு போன்ற அரிக்கும் பண்புடைய பொருட்களைக் கண்டிப்பாக நெகிழியிலிருந்து (பிளாஸ்டிக்)முதன்மையாக வெளியேற்றுவது நல்லது.
கண்ணாடிப் புட்டிகள் உடைந்துவிடுமென்பது ஒரு மூடநம்பிக்கையாகவே எனக்குப் படுகிறது. பால் முதல் எண்ணெய் போன்ற பல பொருட்களுக்கும் சில வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கண்ணாடிப் புட்டிகளைப் பயன்படுத்துகிறோம். இதுவரை ஒன்றிரெண்டு புட்டிகளுக்குமேல் உடைந்ததில்லை.
கண்டிப்பாக அடுப்பின் அனல் சூழ்ந்த பகுதியில் நெகிழிப் (பிளாஸ்டிக்)புட்டிகள், பைகளை வைத்து பயனப்டுத்தாதீர்கள்.