ரயில் டிக்கெட்டுகளுக்கும் காப்பீடு கட்டாயம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி

train-ticket-insurance-supreme-court-order
ரயில் டிக்கெட்டுகளுக்கும் காப்பீடு கட்டாயம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி

ரயில் பயணிகள் அனைவருக்கும் காப்பீட்டு பாதுகாப்பை விரிவாக்கும் நோக்கில், நேரில் கவுண்டர்களில் பெறப்படும் சாதாரண ரயில் டிக்கெட்டுகளுக்கும் வரும் அக்டோபர் 27 முதல் கட்டாயமாக இன்சூரன்ஸ் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய ரயில்வேக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டால், அதற்கு ரயில்வே வாரியமே நேரடியாகப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

கடந்த ஜூன் 2023-ல் நடைபெற்ற ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து, விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க கோரியும், 'கவச்' பாதுகாப்பு அமைப்பை அமல்படுத்தாததே விபத்திற்கு காரணம் என கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு அக்டோபர் 6 அன்று இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. இந்த மனுவின் விசாரணையின் போது, ரயில்வே நடைமேம்பாலங்கள், தண்டவாளங்களைச் சுற்றி வேலி அமைத்தல் மற்றும் கவுண்டர்களில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு இன்சூரன்ஸ் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பயணிகள் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரணையை விரிவுபடுத்தியது.

முந்தைய விசாரணைகளின் போது, ரயில்வே வரவு செலவுத் திட்டத்தில் பயணிகள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. அதாவது கடந்த மே 11 அன்று, கவுண்டர் டிக்கெட்டுகளுக்கும் இன்சூரன்ஸ் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது.
இருப்பினும், கவச் அமைப்பை விரிவுபடுத்துதல், நடைமேம்பாலங்கள் கட்டுதல் மற்றும் வேலி அமைத்தல் ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளில் என்னென்ன சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன மற்றும் அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தாக்கல் செய்யப்படாததற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மீண்டும் அக்டோபர் 6 அன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சாதாரண மக்களின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான விஷயத்தில் ரயில்வே அமைச்சக அதிகாரிகளின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளிக்கிறது" என்று குறிப்பிட்டனர்.
"தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே தொடர்ந்து இந்த நீதிமன்றத்தில் கூறி வருகிறது. இருப்பினும், அத்தகைய வாக்குறுதிகள் காகிதத்தில் மட்டுமே உள்ளன என்றும், களத்தில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிகிறது. சாதாரண மக்களின் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களைத் தடுப்பது தொடர்பான இலக்கு பகுதிகளுக்கு குறிப்பிடப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் கூட முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ரயில்வேயின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்த நீதிபதிகள், ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று தொடக்கத்தில் உத்தரவிட்டனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜீத் பானர்ஜி, கடந்த ஓராண்டில் களத்தில் செய்யப்பட்ட உண்மையான பணிகள் குறித்தும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியாததற்கான காரணங்களை விளக்கியும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு அளிக்குமாறு கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதிகாரிகளை நேரில் ஆஜராக சொன்ன உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பயணிகள் பெரும்பாலும் ரயில் நிலைய கவுண்டர்களிலேயே டிக்கெட்டுகளை வாங்குவதால், அவர்களுக்கும் காப்பீட்டு பாதுகாப்பை விரிவாக்க போதுமான அவகாசம் அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அமர்வு , "இந்த விஷயத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், இன்னும் இரண்டு வாரங்களுக்குள், அதாவது அக்டோபர் 27 முதல், அனைத்து ரயில் நிலையங்களிலும் கவுண்டர்களில் விற்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளுக்கும், ஆன்லைனில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு இணையான காப்பீட்டு பாதுகாப்பு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவு கட்டாயமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். தவறினால் அதற்கு ரயில்வே வாரியமே நேரடியாகப் பொறுப்பேற்க நேரிடும்' என்றது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.