மனைவியைத் தாக்கி சித்ரவதை - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு.
சைவ உணவு மன அமைதியைத் தரும்: ஐகோர்ட் நீதிபதி பேச்சு
சைவ உணவு பழக்கம் மன அமைதியைத் தருவதுடன், மனிதர்களுக்குள் அக அமைதியை ஏற்படுத்தி இறை உணர்வோடு ஒன்றிணைய உதவுகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இயற்கை மருத்துவத் திருவிழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய அவர், உண்ணும் உணவே மனிதனின் எண்ணங்களையும் மனதையும் தீர்மானிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் 'உலக வெஜ் கவுன்சில்', அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் ரோட்டரி மாவட்டம் 3233 ஆகியவை இணைந்து நடத்திய 'இயற்கை மருத்துவத் திருவிழா' நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் பேசினார். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 22 யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 3,000 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் இயற்கை மருத்துவச் சிகிச்சை முறைகள் மற்றும் உணவு அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சைவ உணவைத் தேர்ந்தெடுப்பது என்பது வெறும் உணவு விருப்பம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல என்றும், அது பிற உயிரினங்களுடன் நாம் கொண்டிருக்கும் உறவைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மற்றொரு உயிரினத்தின் துன்பத்திலிருந்து நமக்கு உணவு கிடைக்கவில்லை என்பதை அறியும்போது, அது மனத்திற்கு அமைதியையும் மனநிறைவையும் தருகிறது என்று கூறிய அவர், சைவ உணவிற்கும் மன அமைதிக்கும் இடையே உள்ள இந்தத் தொடர்பைச் அறிவியலும் ஒப்புக்கொள்கிறது என்றார்.
மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் மனநிலையை உருவாக்குவதில் நாம் உண்ணும் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சுட்டிக்காட்டிய அவர், "நாம் உண்ணும் உணவே நமது எண்ணங்களை உருவாக்குகிறது, அதுவே மனமாகவும் மாறுகிறது" என்று வலியுறுத்தினார். மாறுபட்டு வரும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசுகையில், உணவகங்களில் சாப்பிடுவது தற்போதைய நவீன கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகிவிட்டது என்றார். முன்னர் வாரத்திற்கு ஒரு முறை, பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அசைவ உணவு உண்டு வந்த நிலையில், தற்போது சிலர் தினமும் மூன்று வேளையும் அசைவ உணவு சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் திருக்குறள், பௌத்தம் மற்றும் சமண மதங்களின் கோட்பாடுகளை நினைவுகூர்ந்த அவர், சைவ உணவுப் பழக்கம் என்பது பிற உயிர்களுடன் நாம் பேணும் பிணைப்பைக் காட்டுகிறது என்றார். இருப்பினும், சைவ உணவைத் தேர்ந்தெடுப்பது பிறரை விடத் நாம் உயர்ந்தவர் என்பதற்கான அடையாளமோ அல்லது மற்ற நிராகரிப்பதற்கான காரணியோ ஆகிவிடக் கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை முழு பக்தி உணர்வோடு பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அந்த வாழ்த்துப் பாடல் தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரின் அடையாளத்தைக் குறிப்பதாகத் தெரிவித்தார். சைவ உணவு, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை வழி ஆரோக்கிய வாழ்கை முறை குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டது.