சோபா அனுப்பியது உண்மை தான்..  ஏன் தெரியுமா? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

tvk-minister-adhav-arjuna-sofa-by-election-meeting
சோபா அனுப்பியது உண்மை தான்..  ஏன் தெரியுமா? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

விசிக, ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் கால் மேல் கால் போட்டு அமர்வதற்காக தான் தவெக சோபா கொடுத்தது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். வைகோ, திருமாவளவனை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, கூட்டணி இல்லையென்றால் உதயநிதி ஸ்டாலின் டெபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தவெக கூட்டணி அமைக்கப்பட்ட பின் நடக்கும் முதல் பொதுக்கூட்டமாக இது அமைந்திருக்கிறது.

இதில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதற்காக நாங்கள் சோபா கொடுத்தோம் என்கிறார்கள். ஆமாம், சோபா அனுப்பினோம்.. ஐயூஎம்எல் 60 ஆண்டு அமைச்சரவையில் கால் மேல் கால் போட்டு அமைச்சராக அமர்வதற்காக சோபா அனுப்பினோம். ஏன் 60 ஆண்டுகளாக உங்கள் குடும்பத்தினர் மட்டும் தான் இருக்க வேண்டுமா?

ஏன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வன்னி அரசு அமைச்சராக கூடாதா? அது வன்னி அரசுக்கான பதவி அல்ல.. அது ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம். இந்த அரசியல் எல்லாம் உதயநிதிக்கு தெரியாது. 15 எம்பிக்கள் வைத்து கொண்டு 8 அமைச்சர்களை வாங்கினீர்களே? அதே விசிகவும், ஐயூஎம்எல்லும் அமைச்சர் பதவிகள் வாங்கினால், சோபா வாங்கிவிட்டார்கள் என்று பேசுகதா?

பாஜக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கூட்டணிக்கு சென்ற போது சொல்லிவிட்டா சென்றீர்கள்? அந்த வரலாறு எல்லாம் நன்றாக தெரிந்து கொண்டு தான் வந்துள்ளோம். எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்திருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு சோப்பாக்கத்தில் கூட்டணி மட்டும் இல்லையென்றால் டெபாசிட் இழந்திருப்பார். நீங்கள் குறிஞ்சி மாளிகையில் சோபாவில் அமர்ந்திருக்க காரணமே அவர்கள் தான்.

மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்கு பெற யாருக்கு பணம் தர மாட்டோம். எங்கள் தலைவர் மீது நம்பிக்கை உண்டு. திமுக எப்போதும் அதிகாரத்தை பற்றி மட்டுமே யோசிக்கும். திமுக 2வது முறை வென்றதாக வரலாறே இல்லை. சிறந்த ஆளுங்கட்சியாக திமுக இருந்ததில்லை. ஆட்சி அதிகாரத்தை பெற்று, குடும்ப ஆட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை ஸ்டாலின் உருவாக்கினார். கூட்டணி இல்லாமல் திமுகவால் 10 தொகுதிகளில் வென்று காட்ட முடியுமா என்று தெரிவித்துள்ளார்.