வசிகரமான பெண் அரசியல்வாதி ஸ்மிருதி இரானி!

smriti-irani-biography
வசிகரமான பெண் அரசியல்வாதி ஸ்மிருதி இரானி!

''நான் வேலையில்லாமல் இருக்கிறேன் எனக்கு யாராவது வேலை தாங்க’’ என்று ஸ்மிருதிராணியே டிவி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு தானே போன் செய்து பேசி வாய்ப்பு கேட்டு முழு நேர சின்னத்திரை நடிகையாக ஒப்புக் கொண்டுள்ளார் என்ற செய்தி சமூக தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதானது, என் கவனத்தை ஈர்த்தது!

13 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பியாகவும், மக்களவை எம்.பியாகவும் பணியாற்றிவர்.

மோடி பிரதமர் ஆனதும் இவருக்கு அதிர்ஷ்டம் அடித்ததில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், ஜவுளித் துறை அமைச்சர், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்.. என இத்தனை துறைகளில் மத்திய அமைச்சராக கோலோச்சினார்.

இது மட்டுமின்றி 2003- தொடங்கி பல அதிகாரமிக்க கட்சிப் பதவிகளை வகித்து வருகிறார். தற்போதும் ஸ்மிருதி இரானி பாஜகவின் இரண்டாவது முறையாக தேசிய செயலாளராக உள்ளார். இப்படியாக

மிகவும் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராக விளங்கும் ஸ்மிருதி இரானி, ’’நான் வேலையின்றி இருக்கிறேன். நடிக்க சான்ஸ் தாங்க’’ என சின்னத்திரையின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களிடம் கெஞ்சி வாய்ப்பு பெற்றதோடு, 12 மணி நேர கால்ஷீட் என்றாலும் கூட தற்போது நடித்துக் கொடுக்கிறார் என்பது தான் செய்தி.

இதை படிக்கும் வாசகர்களில் ஒரு சிலருக்கு பாவம் ஏதோ பொருளாதாரத் தேவை கருதி நடிக்கிறாரோ..என்று தோன்றலாம். மத்திய அமைச்சராக இருக்கும் போது எதுவும் சம்பாதிக்கவில்லை போலும் என்று கூட தோன்றலாம்.

ஆனால், அவ்வாறு என்ன வாய்ப்பில்லை. காரணம் ஸ்மிருதி இரானிக்கு பணத்திற்கு பஞ்சமில்லை. மேலும் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் எம்.பியாக இருந்ததற்கான ஓய்வூதியங்கள் வேறு வருகிறது. ஒரு சில தொழில்களில் அவர் கொஞ்சம் முதலீடு செய்துள்ளதோடு சொத்துக்களும் கணிசமாக வாங்கியுள்ளார்.

இதையடுத்து ஜூலை 2025-இல், ஸ்மிருதி இரானி தனது புகழ் பெற்ற நிகழ்ச்சியான 'க்யுங்கி சாஸ் பி கபி பகு தி' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi)-யின் இரண்டாம் சீசன் மூலம் மீண்டும் தொலைக்காட்சிக்குத் திரும்பினார். ஸ்டார் பிளஸ் (Star Plus) தொலைக்காட்சியிலும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்திலும் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில், ஸ்மிருதி 'துல்சி விரானி'யாகவும், அமர் உபாத்யாய் 'மிஹிர் விரானி'யாகவும் மீண்டும் தோன்றி கலக்கி வருகிறார்.

அரசியல் என்பது ஒரு பார்ட் டைம் வேலை. அதில் அதிக நேரம் தேவையில்லை. கள வேலைகளை பார்க்க ஆயிரமாயிரம் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர். தேவைப்படும் போது நம்ம பிரசன்ஸ் இருந்தால் போதும் என நினைக்கிறார் ஸ்மிருதி இரானி. தற்போதுமே கூட ஸ்மிருதி இரானிக்கு உத்திரபிரதேச தேர்தல் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இவ்வளவு இருந்தும் இப்படியாக தான் விரும்பியபடிக்கு பிஸியாக நடிக்க போய்விட்டார். இவர் 'மோடியின் ஆள்' என்பதால் இவரது முக்கியத்துவத்தை யாரும், என்னவானாலும் குறைத்துவிட முடியாது என்பதே எழுதப்படாத நியதி.

பொதுவாக இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களில் மிகப் பெரும்பாலோர் அரசியலை ஒரு பகுதி நேரத் தொழிலாகத் தான் பார்க்கிறார்கள். இவர்கள் பல தொழில்களில் தங்கள் முதலீடுகளை போட்டு வணிகம் செய்து வருகின்றனர். இதற்காக நமபகமான பினாமிகளையும் வைத்துள்ளனர். வணிகம் என்றால் சாதாரண வணிகமில்லை. பெரும் முதலீடுள்ள வணிகங்களில் தான் ஈடுபடுகின்றனர். அரசியலில் தாங்கள் என்ன பேச வேண்டும் என்பதை ஆட்சியில் இருக்கும் போது அதிகாரிகளும், ஆட்சியில் இல்லாத போது அறிவாளிகளும் எழுதி தருகிறார்கள்!

எந்தப் பிரச்சினைகள் குறித்தும், அதன் தீர்வை நோக்கி ஆழமான, அக்கறை கொண்ட பார்வை பெரும்பாலும் எந்த அரசியல் தலைவருக்கும் இன்றில்லை. எதிர்கட்சிகளை எப்படி டீல் செய்ய வேண்டும் என்பதிலும், தேர்தல் நேரங்களில் மக்களிடம் ஓட்டு பெறுவது எப்படி என்பதிலும் மட்டுமே தங்கள் கவனத்தை செலுத்துகிறார்கள்.

தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டாலுமே கூட முதல்வர் விஜய் ஏராளமான தொழில்களில் முதலீடு செய்துள்ளார். கல்யாண மண்டபம், தியேட்டர் மால்கள், வணிக வளாகங்கள் அவருக்கு உள்ளன. உதயநிதி ஸ்டாலின் திரைப்பட விநியோகஸ்தர் என்பது வெளிப்படையாக தெரியும் தொழில் என்ற போதிலும் பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலரும் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், குவாரிகள், சாராய வியாபாரம்…என குறு நில மன்னர்களாகத் தான் உள்ளனர்.

ஒ.பி.ராமசாமி ரெட்டியார், காமராஜர், அண்ணா போன்று பொதுத் தொண்டுக்கே தங்களை அர்ப்பணித்தவர்களுக்கு இன்றைய அரசியலில் இடமில்லை. உண்மையிலேயே பொதுத் தொண்டுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தவர்களுக்கு 24 மணி நேரமும் இடைவிடா பணிகள் இருந்து கொண்டே இருக்கும். ஓய்வென்பதே அபூர்வமாகத் தான் கிடைக்கும்.

சாவித்திரி கண்ணன்