சி எம் விஜய் அதிரடி - சிங்கபெருமாள் கோயில் - திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டரை ரத்து!

tn-cm-vijay-singaperumal-koil-highways-tender-cancel
சி எம் விஜய் அதிரடி - சிங்கபெருமாள் கோயில் - திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டரை ரத்து!

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சிங்கபெருமாள் கோவில் - பூஞ்சேரி இடையேயான 10 வழிச்சாலை அமைப்பதற்கான டெண்டரை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிங்கபெருமாள் கோவிலையும் மாமல்லபுரம் அருகேயுள்ள பூஞ்சேரியையும் இணைக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தினை நிர்வாக காரணங்கள் என்று கூறி தவெக அரசு டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகரத்தில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, எண்ணூர் அருகே காட்டுப்பள்ளி துறைமுகம் முதல் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி வரை சாலை அமைக்க பல்வேறு ஆட்சிக் காலத்தில் பேசப்பட்டு கடைசியாக கடந்த திமுக ஆட்சியின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 132 கிலோ மீட்டருக்கு 10 வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டது.

அதாவது 6 முதன்மை வழித்தடங்களுடன் இருபுறமும் தலா இரண்டு வழித்தடமுள்ள அணுகுசாலையுடன் கூடிய 10 வழி நெடுஞ்சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் பெறப்பட்டன. சாலை அமைப்பதற்கான பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஏற்கனவே 4 கட்டங்களாக டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

தற்போது 5-வது கட்டமாக சிங்கப்பெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரையிலான சாலை அமைப்பதற்கான டெண்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோரப்பட்டது. சுமார் ரூ.2,700 கோடியில் இந்த சாலை அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் இதற்கான ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் மாதம் தொகை தொடர்பான ஒப்பந்த புள்ளியும் திறக்கப்பட்டது.

ஒப்பந்த நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளால் பணி ஆணைகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், விஜய்யின் தவெக அரசு அமைந்துள்ள சூழலில், சிங்கப்பெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரையிலான சாலை அமைப்பதற்கான டெண்டரை தவெக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இதே போன்று உயர்மட்ட சாலை அமைப்பதற்காக வழங்கப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்ட சூழலில் இந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் ஒரு டெண்டர் ரத்து செய்யப்பட்டால் அரசுக்கு நிதிச்சுமை குறைவாக இருக்கக் கூடிய வகையில் தகுதி வாய்ந்த புதிய நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு உடனுக்குடன் அதே பணியை செய்வதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.

எனவே சென்னை இறுதிச்சாலை திட்டம் என்று சொல்லப்படக் கூடிய, மாமல்லபுரம் பூஞ்சேரி டூ எண்ணூர் வரை சாலை அமைப்பதற்கான திட்டம் கைவிடப்பட்டதாக அர்த்தம் இல்லை என்றும், சிங்கப்பெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரையிலான சாலை அமைக்கும் பணிக்கு புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டு சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்ற தகவலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.