நடிகர்களால் தமிழ்நாட்டுக்கு அவப்பெயர்? - நயினார் நாகேந்திரன்

actor-actress-tamilnadu-bjp-nayinar-nagendran
நடிகர்களால் தமிழ்நாட்டுக்கு அவப்பெயர்? - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தேவையற்றது என்றும், இந்தத் தேர்தலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இல்லையெனில், தமிழக மக்கள் நடிகர், நடிகைகள் பின்னால் சென்றார்கள் என்ற அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் சேவை மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லை பெருமாள்புரம் மாநகராட்சி பள்ளி அங்கன்வாடி குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கியதாக குற்றம்சாட்டினார். இதனால் இடைத்தேர்தலில் அதிகளவில் பணம் செலவிடப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், தமிழக சட்டமன்றம் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

தமிழகத்தில் மின்வெட்டு, பால் விலை உயர்வு, பால் தட்டுப்பாடு, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதே நேரத்தில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மதச்சார்பற்ற ஆட்சி என்று தவெக கூறுவதை ஏற்க முடியாது என்றும், முதலமைச்சர் முதல் சபாநாயகர் வரை ஒருதலைப்பட்சமாக பேசி வருவதாகவும் அவர் கூறினார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் செப்டம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

திமுகவின் தற்போதைய அரசியல் நிலை குறித்தும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். மேலும், பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் அமைப்பதற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான திட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

விசிக தலைவர் திருமாவளவன் 'CM 2031' என குறிப்பிடப்பட்ட காரில் வந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த எழுத்துகளை ஒரு நம்பர் பிளேட்டாக மட்டுமே பார்ப்பதாக தெரிவித்தார்.