இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை - அன்புமணி

by-election-pmk-anbumani-ramadoss
இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை - அன்புமணி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் கணிதா சம்பத் போட்டியிடுகிறார். இந்நிலையில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் களமிறக்கலாம் என அன்புமணி ஆலோசனை வழங்கியதாக பாமக தரப்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெகன் மூர்த்தியை பொது வேட்பாளராக நிறுத்தி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெறலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு கே.வி.குப்பம் தனித்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஜெகன் மூர்த்தி வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால் இந்த ஆலோசனையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்காமல் கணிதா சம்பத்தை வேட்பாளராக அறிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் தாராபுரத்திலும் பொது வேட்பாளர் தொடர்பான ஆலோசனை ஏற்கப்படாததால், இரு தொகுதிகளிலும் பாமக யாருக்கும் ஆதரவு அளிக்காமல் இருக்க முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுக தரப்பில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியும் அன்புமணியின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவு யாருக்கும் இல்லாத நிலையில், அந்த கட்சியின் வாக்குகள் எந்த வகையில் பிரியும் என்பது தேர்தல் களத்தில் முக்கிய விவாதமாகியுள்ளது. See less