மனைவியைத் தாக்கி சித்ரவதை - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு.
ரீல்ஸ் மோகம் 30 நாள்.. ரிவர்ஸ் மாடல் ஆட்சி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்
தமிழக வெற்றிக் கழக ஆட்சி குறித்து திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இடஒதுக்கீடு போராட்டத்தில் உ*யிரிழந்த தியாகிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக ஆட்சி “ரிவர்ஸ் மாடல்” மற்றும் “டைவர்ஷன் மாடல்” ஆட்சியாக இருப்பதாக விமர்சித்தார்.
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அதனை மறைப்பதற்காக வேறு விவகாரங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதாக எம்ஆர்கே பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்கள். தற்போது ரீல்ஸ் மோகம் முடிந்து வருகிறது” என்றும் அவர் கூறினார்.
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்றதாகக் கூறிய அவர், தற்போது மாநிலம் பின்னோக்கி செல்வதாக விமர்சித்தார். குறிப்பாக பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், தமிழகத்துக்கு வரவிருந்த சில தொழில் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றபோது தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றதாகக் குறிப்பிட்ட எம்ஆர்கே, தற்போது விஜய் லண்டன் சென்றபோது தொழில்துறை அமைச்சர் உடன் செல்லவில்லை என விமர்சித்தார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்பான சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள், ஆட்சியின் மீதான கவனத்தை திசைதிருப்புவதற்காக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், இடைத்தேர்தல்களில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்து பேசிய அவர், எதிர்பார்த்த மாற்றம் நடைபெறாததால் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளிக்க அவர்கள் தயங்குவதாக தெரிவித்தார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி காரணமாக ஒவ்வொரு கட்சியாக கூட்டணியில் இருந்து விலகி வருவதாகவும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார்.