திருச்சியில் 3வது நாளாக விவசாயிகள் போராட்டம்!

agriculture-men-s-protest-in-trichy
திருச்சியில் 3வது நாளாக விவசாயிகள் போராட்டம்!

திருச்சியில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த சுமார் 500 விவசாயிகள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில், பொது இடத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் தனியார் நிலத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும், போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகளை தடுக்க முயற்சித்ததாகவும், சில விவசாய சங்க நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகவும், பெரிய விவசாயிகளின் பயிர்க்கடனில் குறிப்பிட்ட அளவும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் கடன் தொகையின் அடிப்படையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தங்களது கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் போராட்டங்களுக்குப் பிறகு அந்த வரம்பு ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இன்று உணவு சமைப்பதற்காக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்தனர். இவற்றை காவல்துறையினர் தடுத்ததாக கூறப்பட்டதால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விவசாயிகள் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பின்னர் அதை ஒத்திவைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கஞ்சித் தொட்டி போராட்டம் நடைபெறலாம் என்ற தகவலின் அடிப்படையிலேயே உணவுப் பொருட்களை போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், போராட்டப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.