மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மக்கள் - ஆர்எஸ் பாரதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை விமர்சித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், விலைவாசி உயர்ந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய ஆர்எஸ் பாரதி, “மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மக்கள் இன்னும் மயக்கத்தில் இருக்கிறார்கள். தற்போது மின் கட்டணத்தை பார்த்த பிறகுதான் மக்களுக்கு சற்று சொரணை வந்திருக்கிறது” என்று விமர்சித்தார்.
மேலும், கடந்த ஆட்சியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். பெரம்பூர் தொகுதியில் திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் விஜய் உடனடியாக பதிலளிக்காமல் கால அவகாசம் கேட்டதாகவும் ஆர்எஸ் பாரதி விமர்சித்தார்.
அவசரநிலை காலம், மிசா கைது உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகளையும் தனது பேச்சில் குறிப்பிட்ட அவர், மிசா காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான அரசு ஆவணங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதேபோல், ஜெயலலிதா தொடர்பான டான்சி நில வழக்கையும் சுட்டிக்காட்டி பேசினார்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த ஆர்எஸ் பாரதி, சட்டம்-ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாகவும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இறுதியில், மக்கள் செய்த தவறால் ஆட்சியில் அமர்ந்தவர்கள் தியாகங்களை கொச்சைப்படுத்தவோ, பழித்துப் பேசவோ கூடாது என்று கூறிய அவர், நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார்.