மனைவியைத் தாக்கி சித்ரவதை - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு.
லண்டனில் அஜித் கார் ரேஸை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்!
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இங்கிலாந்து சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தை பொருளாதார ரீதியாக மேலும் வளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10 முதல் 16-ஆம் தேதி வரை விஜய் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். லண்டன் உள்ளிட்ட நகரங்களில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார். ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை இரவு சென்னையில் இருந்து விஜய் லண்டன் புறப்பட்டுச் சென்றார். இந்த பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவர் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே வெளியானது.
இதற்கிடையே விஜய், அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் நடைபெறும் “லீமேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன்” கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தனது ஏகே ரேசிங் அணியுடன் பங்கேற்கிறார்.
இந்த போட்டியை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிடுவதுடன், கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என விஜய் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டாலும், சமீப காலமாக விஜய்-அஜித் தொடர்பான நிகழ்வுகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இரு தரப்பு ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.