100 நாட்களில் குற்றங்கள் உருவாகவில்லை.. சட்டசபையில் விஜய் அதிரடி!

tn-assembly-cm-vijay-speech

3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, முதல்வர் விஜய் பதிலளித்து வருகிறார்.

கடந்த 3-ம் தேதி நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, போதைப்பொருள் விவகாரம், பெண்கள் பாதுகாப்பு, காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, ஆணவக் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனால் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே சட்டசபையில் கடும் விவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு திங்கள்கிழமை பதிலளிப்பதாகவும், அப்போது அனைவரும் அவையில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று சட்டசபை கூடியதும் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வரவிருந்த தனித்தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அதனை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.

இதையடுத்து காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் பதிலளிக்கத் தொடங்கினார். அப்போது, தமிழ்நாட்டில் தற்போது ஏற்படும் குற்றங்கள் அனைத்தும் கடந்த 100 நாட்களில் உருவானவை அல்ல என்று அவர் தெரிவித்தார்.

ஒரு மாநிலத்தின் அமைதியில்தான் அதன் முன்னேற்றம் இருப்பதாகக் கூறிய முதல்வர், குற்றங்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றார். குறிப்பாக சொத்து தகராறு, போதைப்பொருள் பயன்பாடு, பழிவாங்கும் எண்ணம் உள்ளிட்டவை குற்றங்களுக்கு காரணமாக இருக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆட்சியின் குறுகிய காலத்தை மட்டும் வைத்து குற்றச்செயல்களை மதிப்பிட முடியாது என்றும், சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்வர் விஜய் தனது பதிலுரையில் விளக்கி வருகிறார்.