டிடிவி வைத்த செக்.. அதிமுக கூட்டணியில் புது புயல்?

ammk-ttv-dinakaran-admk-edappadi-palanisamy
டிடிவி வைத்த செக்.. அதிமுக கூட்டணியில் புது புயல்?

அதிமுக–அமமுக கூட்டணி வலுவாக இருப்பதாக டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வந்தாலும், மறுபுறம் அதிமுக நிர்வாகிகளை அவர் ரகசியமாக சந்தித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளுடன் தினகரன் பேசி வருவதாக கூறப்படுவது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. தேர்தல் தோல்வி, நிர்வாகிகள் விலகல், கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி என அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டன. சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் பணியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே சசிகலாவை மீண்டும் அதிமுகவுக்குள் கொண்டு வருவது தொடர்பாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், சசிகலாவை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுகவில் மீண்டும் பழைய விவகாரங்கள் தலைதூக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுடன் டிடிவி தினகரன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுக்குள் மீண்டும் நுழைவதற்கோ அல்லது அக்கட்சியில் உள்ள நிர்வாகிகளை தன்னுடைய பக்கம் கொண்டு வருவதற்கோ தினகரன் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் எடப்பாடி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு அரசியல் முரண்பாடுகளுக்குப் பிறகும் 2026 தேர்தலில் அமமுகவை கூட்டணியில் இணைத்ததாகவும், அதற்கு பதிலாக தற்போது அதிமுக நிர்வாகிகளையே தினகரன் குறிவைப்பது நியாயமா என்றும் ஆதரவாளர்களிடம் எடப்பாடி வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அதிமுக–அமமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் எந்த திசையில் செல்கிறது என்பது தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.