பிரதமர் விஜய்.. அமெரிக்க அதிபர் கூட ஆகலாம்! – எடப்பாடி பழனிசாமி

admk-edappadi-palanisamy-tn-cm-vijay-pm-vijay
பிரதமர் விஜய்.. அமெரிக்க அதிபர் கூட ஆகலாம்! – எடப்பாடி பழனிசாமி

“அடுத்த பிரதமர் விஜய்” என சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யப்படுவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் தெரிவித்துள்ளார். விஜய் இந்திய பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் என அவர் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் வரும் சட்டமன்ற காட்சிகளைப் போல இருப்பதாக விமர்சித்தார். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பினால், தொகுதி பிரச்சினைகளை எம்எல்ஏக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது மக்களுக்கு தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு துறைக்கான கேள்விகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதில் அளிக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவை கூட்டத்தை நீண்ட நேரம் நடத்துவதற்கு பதிலாக அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளின்படி செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். காவல்துறை மானியக் கோரிக்கையின்போது இது தொடர்பாக அரசிடம் கேள்வி எழுப்பப் போவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசின் நலத்திட்ட அறிவிப்புகளால் செலவினம் அதிகரித்து, எதிர்காலத்தில் கடன் சுமை உயரும் அபாயம் உள்ளதாக விமர்சித்தார். தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்தால் மாநிலத்தின் கடன் 10 லட்சம் கோடி ரூபாய் வரை செல்லக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசின் திட்டமிடல் குறித்தும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். பழைய அரசு பேருந்துகளை தொடர்ந்து இயக்குவது பாதுகாப்பானதல்ல என்றும், புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளில் பணம் சிக்கி வருவதை சுட்டிக்காட்டிய அவர், மாநிலம் முழுவதும் ஊழல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

“அடுத்த பிரதமர் விஜய்” என்ற பிரசாரம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, விஜய் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம். அது அவருடைய விருப்பம். தமிழகத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு எதையும் செய்யலாம்; ஆனால் வடமாநிலங்களில் அது நடக்காது என கிண்டலாக பதிலளித்தார்.