“தவெக இல்லை.. தற்குறி வெற்றிக் கழகம்!” – டிடிவி தினகரன் தாக்கு

tvk-cm-vijay-ammk-ttv-dinakaran
“தவெக இல்லை.. தற்குறி வெற்றிக் கழகம்!” – டிடிவி தினகரன் தாக்கு

தமிழக வெற்றிக் கழக அரசை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக என்பதற்கு பதிலாக “தற்குறி வெற்றிக் கழகம்” என பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக ஆட்சியின் முதல் 100 நாட்களும் சினிமா படம் பார்ப்பது போன்றே இருப்பதாக விமர்சித்தார். நிஜமான ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் தொடர்பே இல்லை என்றும், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கவர்ந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் வளர்ச்சி, மாற்றம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தவெக ஆட்சிக்கு வந்ததாக கூறிய தினகரன், சினிமா கதாநாயகன் மீதான நம்பிக்கையில் இளைஞர்கள் வாக்களித்ததாகவும் விமர்சித்தார்.

மேலும், தமிழகத்தில் கல்வியறிவு உயர்ந்த நிலையில் இருக்கும் போது, தாய்மொழியான தமிழை சரியாக படிக்கவும் பேசவும் தெரியாதவர்கள் எம்எல்ஏக்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் பேச்சுகள் அடிப்படை அறிவு குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சிலர் பயன்படுத்தும் சொற்கள் மற்றும் கருத்துகளை சுட்டிக்காட்டிய அவர், தமிழையும் ஆங்கிலத்தையும் சரியாக பேச முடியாத நிலை இருப்பதாக விமர்சித்தார். குறிப்பாக, சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் பேச்சுகளை பார்த்தால் “23ஆம் புலிகேசி” திரைப்படத்தை நினைவுபடுத்துவதாகவும் அவர் கூறினார்.

தவெக அரசை தேர்வு செய்த மக்களை நினைத்துதான் தனக்கு வருத்தமாக இருப்பதாக தெரிவித்த தினகரன், மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் தற்போதைய அரசியலுக்கு மாற்றாக தவெகவை தேர்ந்தெடுத்ததாக கூறினார்.

ஆனால் சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி ஆட்சியை உருவாக்கியதாக விமர்சித்த அவர், தவெக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது தனிப்பட்ட வருத்தம் இல்லை என்றும், அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்காகவே கவலைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் தற்போது “இருண்ட ஆட்சி” போல் செயல்படுவதாக குற்றம்சாட்டிய தினகரன், தற்போதைய ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்திக்கு விரைவில் முடிவு வரும் என்றும் கூறினார்.