இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
ரோகிணி தியேட்டர் உரிமையாளர் எம் எல்.ஏ ரேவந்த் சரணுக்கு முக்கிய பதவி - சிஎம் விஜய்
மதுரவாயல் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏவும், பிரபல ரோகிணி திரையரங்கின் உரிமையாளருமான ரேவந்த் சரணுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை சிஎம்டிஏ உறுப்பினராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றி விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு அரசு வாரியங்கள், ஆணையங்கள் மற்றும் அமைப்புகளில் நியமிக்கப்பட்டிருந்த சில தலைவர்கள், உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து அந்த பதவிகளில் தவெக ஆதரவாளர்கள் மற்றும் விஜய்க்கு நெருக்கமானவர்களின் நியமனங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ ரேவந்த் சரணுக்கு சிஎம்டிஏ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் திட்டமிடல், நிலப் பயன்பாடு, கட்டுமான அனுமதி உள்ளிட்ட முக்கிய பணிகளில் சிஎம்டிஏ முக்கிய பங்கு வகிக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய சென்னை பெருநகரப் பகுதியின் சுமார் 6,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைப்பது சிஎம்டிஏவின் முக்கிய பணியாகும். 1972-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, சென்னை நகரின் எதிர்கால வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ரேவந்த் சரண் அரசியலுக்கு வருவதற்கு முன்பு திரையுலகில் தொழிலதிபராக அறியப்பட்டவர். சென்னையின் பிரபலமான ரோகிணி திரையரங்கின் உரிமையாளராகவும் உள்ளார். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர், தவெக தொடங்கப்பட்ட பின்னர் அக்கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது கட்சியின் சென்னை மண்டல வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளில் முக்கியமானவரான வினோஜ் பி. செல்வத்தின் சகோதரர் ரேவந்த் சரண் என்பதும் குறிப்பிடத்தக்கது. எம்எல்ஏவாக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே சிஎம்டிஏ போன்ற முக்கிய அமைப்பில் உறுப்பினர் பதவி கிடைத்திருப்பது அவரது அரசியல் பயணத்தில் கவனம் பெற்றுள்ளது.