தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: எடப்பாடி பழனிச்சாமி

admk-palanisamy-tvk-cm-vijay
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: எடப்பாடி பழனிச்சாமி

தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யாது என்றும், ஒருவேளை ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தாலும் தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியில் இருந்து ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,800 பேர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கிய எடப்பாடி பழனிசாமி, பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது, அதிமுக எப்போதும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நலனுக்காக இரண்டு முறை சுமார் ரூ.18 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், நிதி நெருக்கடி இருந்தபோதிலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி நல்லாட்சி வழங்கியதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த 120 நாட்களிலேயே ரூ.28 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியாக இருப்பதாக கூறினார். இதே நிலை ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தால், கடன் மேலும் ரூ.10 லட்சம் கோடி அதிகரித்து ரூ.20 லட்சம் கோடியாகும் என்றும் எச்சரித்தார்.

மேலும், தமிழக வெற்றிக் கழக ஆட்சி எதிர்பாராத வகையில் ஆட்சிக்கு வந்ததாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அந்தக் கட்சிக்கு தெளிவான கொள்கை எதுவும் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும், மக்கள் பிரச்சினைகளுக்காக அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டதை மக்கள் மறந்துவிடக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.