விஜய்க்கு அந்த எண்ணமே இல்லை.. ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர்! - வைகோ பேச்சு

mdmk-vaiko-pm-candidate-rahul-gandhi-cm-vijay
விஜய்க்கு அந்த எண்ணமே இல்லை.. ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர்! - வைகோ பேச்சு

ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடியும்.. வேறு வழியே கிடையாது.. எனவே தவெக அமைச்சர்கள் இனிமேல் அப்படி பேசுவதை நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார். விஜய்யின் கற்பனையில் கூட அந்த மாதிரி எண்ணம் இருக்காது என்பது என்னுடைய கருத்து. எனவே தவெக அமைச்சர்கள் இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும் என விஜய் அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

கடந்த சில நாட்களாகவே விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தவெக அமைச்சர்களும் விஜய் பிரதமர் வேட்பாளர் என்றும் சொல்லி வந்தனர். இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர், தவெக அமைச்சர்கள் ரசிகர்கள் மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்று கூறினார். இந்நிலையில் வைகோவும் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அந்த மாதிரியான எண்ணம் (பிரதமர்) தமிழக முதல்வர் விஜய்க்கோ, அங்கே இருக்கிற யாருக்கோ எண்ணமோ, நோக்கமோ துளியும் கிடையாது. அமைச்சர்கள் பேசும் போதெல்லாம் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் யோசித்து பேச வேண்டும். இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குவது காங்கிரஸ் கட்சி.

அதனால் அந்த அணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தான் நிறுத்த முடியும். வேறு எந்த மாற்றுக்கும் வாய்ப்பு இல்லை. முதல்வர் விஜய்யின் கற்பனையில் கூட அந்த மாதிரி எண்ணம் இருக்காது. இல்லை என்பது என்னுடைய கருத்து. அமைச்சர்கள் நினைத்ததை எல்லாம் பேசக் கூடாது.

ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு அகில இந்திய அளவில் வரப்போகிற தேர்தலில் ராகுல் காந்திதான் ஒரு முதன்மையான வேட்பாளாரக இருக்க முடியும். இனிமேல் இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்த வேண்டும்" என்றார்.