மது குடிப்பவன் நல்லவனா? மாடு பிடிப்பவன் கெட்டவனா? - சீமான் கேள்வி

tn-assembly-jallikkattu-ntk-seeman
மது குடிப்பவன் நல்லவனா? மாடு பிடிப்பவன் கெட்டவனா? - சீமான் கேள்வி

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டு என விமர்சித்த தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது கருத்தை கருப்பையா திரும்பப் பெற்று, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் கருப்பையா சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்திருந்தார். சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி ஆதரிப்பதாக தெரிவித்த சீமான், அதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுவுக்கு எதிராக பேசுவீர்களா?

தமிழ்நாடு முழுவதும் அரசு மதுபானக் கடைகள் மூலம் இளைஞர்கள் மதுவை நோக்கி செல்வதாக விமர்சித்த சீமான், மது அருந்துவதால் உடல், குடும்பம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவது சீரழிவு இல்லையா என கேள்வி எழுப்பினார்.

“மது குடிக்கும் இளைஞன் சீரழியவில்லை; காளையை வளர்த்து ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் இளைஞன்தான் சீரழிகிறானா?” என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். அரசு நடத்தும் மதுக்கடைகளை மூடக் கோருவதற்கு துணிவு இருக்கிறதா என்றும் கருப்பையாவை சீமான் சாடினார்.

ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டு அல்ல

ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல என்றும், தமிழர்களின் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நாட்டு மாடு பாதுகாப்பு மற்றும் கிராமிய பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய பண்பாட்டு அடையாளம் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்காக தயார்படுத்தும் விவசாயிகள், அதனை குடும்ப உறுப்பினரைப் போல பல ஆண்டுகள் பராமரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை மறந்துவிட்டீர்களா?

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய சீமான், அந்த போராட்டம் தமிழர்களின் உரிமையையும் பண்பாட்டு அடையாளத்தையும் காப்பதற்காக நடைபெற்றது என்றார்.

எனவே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே அதனை இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டு எனக் கூறுவது வேதனைக்குரியது என்றும், தனது கருத்தை கருப்பையா உடனடியாக திரும்பப் பெற்று தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.