“டவர் இல்லாததால் எம்.எல்.ஏ ஆனேன்” - சட்டசபையில் சிரிப்பலை!

tn-assembly-dmk-mla-kutti-sudhakar
“டவர் இல்லாததால் எம்.எல்.ஏ ஆனேன்” - சட்டசபையில் சிரிப்பலை!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ பேச்சால் சட்டசபையில் இன்று சிரிப்பலை எழுந்தது. வால்பாறை எஸ்டேட்களில் செல்போன் டவர் வசதி கோரி பேசிய வால்பாறை எம்.எல்.ஏ சுதாகர், "டவர் இல்லாததால்தான் நானே எம்.எல்.ஏ ஆனேன், டவர் இருந்திருந்தால் இன்ஸ்டா ரீல்ஸே வந்திருக்கும்" எனப் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் பேசினர். வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ குட்டி என்கிற சுதாகர் எழுந்து தனது கோரிக்கைகள் குறித்து பேசினார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு, சட்டமன்ற கொறடா எ.வ.வேலு, அமைச்சர்கள், வால்பாறை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது பேச்சைத் தொடங்கினார் குட்டி சுதாகர்.

தொடர்ந்து பேசிய சுதாகர், "மதுரை, திருச்சியிலிருந்து வந்த மக்கள்தான் வால்பாறையில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளத்துக்கு இணைய ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்" என்று பேசினார்.

அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்த நிலையில், பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு மணி எழுப்பி எச்சரித்தார். அதற்கு திமுக எம்.எல்.ஏ. சுதாகர், "ஐயா மணி அடிக்காதீங்க.. எனக்கு சாமி வந்து விடும்" என்று சிரித்தபடி கூறியதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து அவர் பேசும்போது, "தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் எல்லாம் மதுரை, திருநெல்வேலி, சேலம் பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு வீடு வசதி கிடையாது. கடந்தாண்டுகளில் காட்டு விலங்குகளால் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்" என்று பேசியபோது "நன்றி சொல்லி முடிங்க" என்று பேரவைத் தலைவர் குறுக்கிட்டார்.

தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. சுதாகர், "ஐயா, ஒரே நிமிஷம்... எல்லாத்தையும் சொல்லிவிட்டுத்தான் வர வேண்டும் என்று மக்கள் கூறியிருக்கிறார்கள். 720 கி.மீ. தொலைவிருந்து வருகிறேன். சொல்லாமல் சென்றால் அடித்தே விடுவார்கள். பேசுவதற்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள்.

வால்பாறை தொகுதியில் 40 எஸ்டேட்கள் உள்ளன. அங்கு செல்போன் டவர்களே இல்லை. யானை வந்தால், யானை வந்துவிட்டது என்று சொல்வதற்கு கூட சிக்னல் கிடையாது. டவர் இல்லாததால் தான் நானே எம்.எல்.ஏ ஆனேன்.. டவர் இருந்திருந்தால் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என வந்திருக்கும்." என்று பேசினார். இதனால், சட்டசபையில் கட்சி வித்தியாசமின்றி அனைவர் மத்தியிலும் சிரிப்பலை எழுந்தது.