மதுரை சின்னப்பிள்ளை விவகாரம் - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

tn-assembly-minister-keerthana-tvk-madurai-chinnapillai
மதுரை சின்னப்பிள்ளை விவகாரம் - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

மதுரை சின்னப்பிள்ளை ஓ-ரிங் என்ற கருவியை கண்டுபிடித்தார் என அமைச்சர் கீர்த்தனா கூறியது தவறான கருத்து என விமர்சனத்திற்குள்ளான நிலையில் இன்றைய தினம் சட்டசபையில் அவர் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார். மேலும் தான் சுருக்கமாக சொன்னது சமூகவலைதளத்தில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டசபை விதி எண் 111-ன் கீழ் ஒரு திருத்த அறிக்கையை அளிக்க வேண்டும் என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அனுமதி கோரியுள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்திருந்தார்.

அப்போது கீர்த்தனா கூறுகையில், ஆகஸ்ட் 13, 2026 வெற்றித் தமிழ்நாடு என்ற மாநாட்டில் சுஸ்லான் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதே நிறுவனம் , ஆந்திராவில் கிரவுண்ட் பிரேக்கிங் செய்தார்கள். அதை வைத்து அந்த நிறுவனம் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு போய்விட்டதாக ஒரு தவறான செய்தி சமூகவலைதளத்தில் காட்டுத் தீ போல் பரவிக் கொண்டு வருகிறது.

மக்களின் மன அமைதிக்காக இந்த விதியின் கீழ் திருத்த விரும்புகிறேன். 2006 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் சுஸ்லான் நிறுவனம் தனது உற்பத்தி நடவடிக்கைகளை தொடங்கியது. காற்றாலை எரிசக்தித் துறைக்கு தேவையான castings, control panel உள்ளிட்டவையின் உற்பத்திக்கான வசதிகள் அங்கு அமைக்கப்பட்டன.

2011- 2020 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கன்ட்ரோல் பேனல், கியர் பாக்ஸ் உற்பத்தி உள்ளிட்டவைகளில் இருந்து அந்த நிறுவனம் படிப்படியாக விலகிக் கொண்டது. இதையடுத்து தவெக ஆட்சிக்கு வந்ததும் அந்த சுஸ்லான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் நம் மாநிலத்தில் தொழில் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறது. அதன்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்றார்.

அது போல் மதுரை சின்னப்பிள்ளை குறித்து அவர் தவறான தகவலை தெரிவித்ததாக பலர் விமர்சித்து வரும் நிலையில் அதற்குரிய விளக்கத்தை அளித்துள்ளார்.

அவர் கூறுகையில் , மதுரை மாவட்டத்தில் இயங்கும் Dhan பவுன்டேஷன் என்ற சுய உதவிக் குழுவின் அமைப்பில் ஒரு ஆக்டிவ் உறுப்பினர் சின்னப்பிள்ளை. அப்பன் திருப்பதி பகுதியில் வைகை வட்டார களஞ்சியம் சுய உதவிக் குழு மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த சிறப்பாக பணியாற்றி வந்தார்.

கிராமப் பெண்களிடையே ஒரு சேமிப்பு பிரிவைத் தொடங்க முயற்சிகள் மேற்கொண்டன. பெண்களை மேம்படுத்துவதன் மூலம் வறுமை மற்றும் கடன் தொல்லைகளை குறைக்க பல பங்களிப்புகளை செய்திருந்தார். அவரது சேவையை பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருதானது 2019இல் மத்திய அரசு வழங்கியது.

ஆனால் அவரது செயல்களுக்காக மட்டுமே 2001 ஆம் ஆண்டு ஸ்ரீ சக்தி புரஸ்கர் விருது பெற்ற 5 பெண்களில் சின்னப்பிள்ளையும் ஒருவர். அந்த விருது வழங்கும் விழாவில்தான் அவரது மகத்தான செயலை பாராட்டி அவரது பாதங்களை தொட்டு ஆசி பெற்றார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்! அதுவும் அவரது செயலுக்கான அங்கீகாரம் தான்.

அதே சமயம் மதுரையில் இயங்கும் நிறுவனமான ஹைடெக் அராய் என்ற ஆட்டோ மொபைல் உதிரிபாக நிறுவனத்திற்கு இதே சுய உதவிக் குழுக்கள் மூலம் ஓரிங் என்ற சிறிய ரப்பரால் செய்யப்படும் காஸ்கட்டை ஜாப் வொர்க் அடிப்படையில் சுய உதவிக் குழுக்கள் மூலம் செய்து தர உந்துதலாக இருந்தார்.

இன்றளவும் மதுரை வட்டார பகுதியில் சுமார் 200 பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பதை இந்த பேரவையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தொழில்துறையையும் மகளிர் சுய உதவிக் குழுக்களையும் இணைத்து ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களும் வாழ்வாதார வாய்ப்புகள் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இதுதான் பேச வேண்டியது.

ஆனால் எதிர்க்கட்சியினர் நான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் நுணுக்கமாக பிரித்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் சொன்னதை விட்டுவிட்டு தேவையில்லாமல் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள். இவ்வாறு கீர்த்தனா பேசினார்.

கடந்த 25 ஆம் தேதி சட்டசபையில் கீர்த்தனா பேசிய போது "மதுரை மாவட்டத்தில் சின்னப்பிள்ளை என்ற மூதாட்டி ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஆயில் லீக்காமல் இருக்க ஓரிங் என்பதை கண்டுபிடித்தார். அவர் மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்தார். இதனால் அவரது வீட்டுக்கே சென்ற அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மூதாட்டியின் காலில் விழுந்து கும்பிட்டார்" என பேசியிருந்தது தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. மதுரை சின்னப்பிள்ளை ஒரு சமூக ஆர்வலராவார். அவர் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

கீர்த்தனா பேசியது தவறான கருத்து என முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன், பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.