சட்டசபையில் குழாயடி சண்டை நடக்குது.. - பெ.சண்முகம் ஆவேசம்!

tn-assembly-cpi
சட்டசபையில் குழாயடி சண்டை நடக்குது.. - பெ.சண்முகம் ஆவேசம்!

சட்டசபையில் ஆக்கப்பூர்வமாக பேசாமல் நேரத்தை வீணடிக்கின்றனர் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். சட்டசபையில் மானியக் கோரிக்கை பற்றி பேசாமல் அவர்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதாக கூறியுள்ள பெ.சண்முகம், சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பாவதால், சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாலும் பயன் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பாவதை தொடர்ந்து எம்எல்ஏ-க்களின் நடவடிக்கைகள் மக்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. சட்டசபையில் திமுகவினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவெக டைவர்ஷன் விளையாட்டையே விளையாடி வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் அமைச்சர் நிர்மல்குமார், கரூர் கம்பெனி என்று பதில் அளித்து திமுகவை சீண்டினார். அதேபோல் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிட்டது தொடர்பாக விவாதத்தில் நிர்மல்குமார், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று பேசி மோதலில் ஈடுபட்டார். அதேபோல் காவிரி விவகாரம் மற்றும் தமிழர்கள் சுட்டுக்கொலை பற்றி பேசினால், தொகுதி மறுவரையறை பற்றி தீர்மானம் மற்றும் திமுக நிலைப்பாடு என்று தவெக பேசுகிறது.

அதேபோல் பாஜக பற்றி பேசிய அமைச்சர் வன்னி அரசு பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரிந்துரை செய்கிறார். இதன் உச்சமாக அவைக் குறிப்பில் இருந்து அமைச்சர்களின் வார்த்தைகள் நீக்கப்பட்டாலும், அவர்கள் கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சபாநாயகரும் அமைச்சர்களை கட்டுப்படுத்த தவறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், சபாநாயகர் மிகவும் நடுநிலையோடு செயல்படுவதாக பலரும் பாராட்டுகிறார்கள். அது நல்ல விஷயம் தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இரு தரப்பு பேசுவதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறார். ஆனால் நேரலையில் ஒளிபரப்பாகும் போது, இதனை நீக்குவதும் ஒன்றுதான்.. நீக்கவில்லை என்றாலும் ஒன்றுதான்.

ஏனென்றால் அனைத்தையும் காதால் கேட்கிறோம்.. கண்ணால் பார்த்துவிடுகிறோம். இதன்பின் நீக்கி என்ன செய்யப் போகிறார். முன்பெல்லாம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டால், எது நீக்கப்பட்டது என்பதே நமக்கு தெரியாது. சட்டசபை நடவடிக்கைகள் என்பது நமது நேரடியாக ஒளிபரப்பாகுவதால், நமது எம்எல்ஏ அவையில் இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அவையில் தூங்குகிறாரா, பேசுகிறாரா என்பதை அறியலாம். தொகுதி பிரச்சனையை பேசாமலேயே பேசினேன் என்றாலும் மாட்டிக் கொள்வார்கள். நேரடி ஒளிபரப்பு என்பது நல்ல வாய்ப்பு.. அதனை சிபிஎம் வரவேற்கிறது. கோடிக்கணக்கான மக்கள் சட்டசபை நடவடிக்கைகள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வுடன் உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

ஆபால் மாறாக குழாயடி சண்டை நடைபெற்று கொண்டிருக்கிறது. சட்டசபை நேரத்தை இப்படி வீணடிப்பதை சபாநாயகர் அனுமதிக்க கூடாது. சட்டசபை குழு தலைவர்களும் மக்களின் பிரச்சனைகளையும், சட்டங்களின் மீது விமர்சனங்களையும் முன் வைக்க வேண்டும். ஆனால் சவால்விடுவது, தெரு சண்டையை போன்ற சூழலை உருவாக்குவதை தமிழக மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.