பரந்தூர் திட்டம் ரத்து.. தமிழக வளர்ச்சி பாதிக்குமா? - அண்ணாமலை கேள்வி

parandur-airport-we-the-leaders-annamalai-cm-vijay
பரந்தூர் திட்டம் ரத்து.. தமிழக வளர்ச்சி பாதிக்குமா? - அண்ணாமலை கேள்வி

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், இதற்கு மாற்றாக புதிய விமான நிலையத்திற்கான இடத்தை அரசு எப்போது தேர்வு செய்யும் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ள நிலையில், ஏற்கனவே திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் எதிர்காலம் குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக மாற்று இடங்கள் பரிசீலனையில் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், புதிய இடம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இடம் தேர்வு, மத்திய அரசின் அனுமதிகள், சட்டப்பூர்வ நடவடிக்கைகள், ஒப்பந்தப்புள்ளிகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர பல ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சென்னை விமான நிலையம் எதிர்கால தேவைகளை சமாளிக்க போதுமானதாக இல்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களின் விமான நிலையங்கள் அதிக பரப்பளவில் அமைந்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போதுமான டாக்ஸிவே மற்றும் ஏர்பிரிட்ஜ்கள் இல்லாததால் மிகப்பெரிய விமானங்களை கையாளும் திறனிலும் சென்னை பின்தங்கியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் விமானப் போக்குவரத்து வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பரந்தூர் விமான நிலையத்திற்காக தேவையான நிலத்தில் சுமார் 1,700 ஏக்கர் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த நிலத்தை இனி அரசு எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பதற்கும் தெளிவான பதில் அளிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இரண்டாவது விமான நிலையத்திற்கான புதிய இடத்தை விரைந்து தேர்வு செய்து பணிகளை தாமதமின்றி தொடங்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.