CM விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு அபராத எச்சரிக்கை! ஐகோர்ட் உத்தரவு!
முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யாவிட்டால், இரு தரப்பினருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் சில வாக்காளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்தனர்.
அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்தும் தனியாக தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86வது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போதே தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்ததையும் நீதிபதி நினைவூட்டினார்.
இதனிடையே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இரு தரப்பினரும் கேட்ட இரண்டு வார அவகாசத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
அதற்கு பதிலாக ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மனுக்களை தாக்கல் செய்யத் தவறினால், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனால், விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா தொடர்பான தேர்தல் வழக்குகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.