டெட் தேர்வில் இருந்து விலக்குக்கோரி தீர்மானம் -அமைச்சர் ராஜ்மோகன்

tet-exam-tn-govt-minister-rajmohan-tn-assembly
டெட் தேர்வில் இருந்து விலக்குக்கோரி தீர்மானம் -அமைச்சர் ராஜ்மோகன்

2010 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு மற்றும் பணிப் பலன்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சட்டப் பேரவையில் இது தொடர்பான தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவை போதிக்கும் தொழில் மட்டும் அல்ல. அது மனித வளத்தை உருவாக்கி சமூகத்தின் எதிர்காலத்தை செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும். மேலும், பாடத் திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கேற்ப எளிமையாக கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறன்களான விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றை ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 23.08.2010 ஆம் நாளில் தேதியிட்ட அறிவிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு உரிய தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வு - டெட் கட்டாயமாக்கப்பட்டது. ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித இடையூறுமின்றி தங்களுடைய பணியை சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 1.09.2025 ஆம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு சிவில் அப்பீல் எண் 1405-2025, 1385-2025, 1386-2025 இல் உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரத்து 701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வைப் பெற இயலும். தேர்ச்சி பெறவில்லை எனில் பணி இழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், சீராய்வு மனுவின் மீதான 29.05.2026 ஆம் நாளிட்ட தீர்ப்பில் பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வுபெறும் ஆசிரியர்களை தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களது வாழ்வாதார உரிமையை பாதிக்கும் செயலாகும்.

எனவே, இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்ட கால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010க்கு முன்பாக அன்றை விதிமுறைகள் மற்றும் நடைமுறையின்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் நீண்ட கால பணி அனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்திய பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

இதற்கேற்ப இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 23 இல் உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு 23.08.2010க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வாயிலாக இதுதொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் நீண்ட காலமாக பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப் பலன்கள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று கூறினார்.