பட்டாசு ஆலை.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு தங்கம் தென்னரசு பதிலடி!
சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் சந்தோஷ கடலில் மிதப்பது போல மாயத் தோற்றத்தை தவெகவினர் ஏற்படுத்துவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசியலுக்காக போராட்டம் நடத்தி வருவதாக அமைச்சர் கீர்த்தனா கூறிய நிலையில், விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டு வரும் பட்டாசு ஆலைகளையும் அதிகாரிகள் மூடுவதாக சாடியுள்ளார்.
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வு மற்றும் அதனால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்புகள் குறித்து சட்டசபையில் விவாதம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், தவெக ஆட்சிக்கு வந்த பின் சிவகாசிகள் சில விபத்துகள் நடந்தன.
அதனால் 6 உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்போது எதிர்க்கட்சிகள் யாரும் களத்திற்கு வரவில்லை.
ஆனால் முதல்வர் விஜய் நிவாரணம் வழங்கி உறுதுணையாக இருந்தார். அதேபோல் ஏதேனும் விதிமீறல்கள் இருக்கிறதா என்று அறியவே 117 இடங்களில் ஆய்வு செய்தோம். அதனை சரி செய்த பின் ஆய்வுகள் நிறுத்தப்பட்டது. தற்போது சிவகாசி பட்டாசு உற்பத்தி பிரச்சனைகள் எல்லாம் சரியாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி பணிக்கு செல்ல தொடங்கிவிட்டனர். ஆனால் திமுக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதாக கூறினார்.
இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து நின்று, சிவகாசியில் விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று யாருமே கூறவில்லை. ஆனால் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், ஆலைகளை பூட்டி வருவதால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் சந்தோஷ கடலில் மிதப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை. விதிகளை பின்பற்றி நிறுவனங்களை ஆய்வு என்ற பெயரில் தொல்லை செய்வதால், தீபாவளி பட்டாசு உற்பத்தி பாதிக்கும். இது பட்டாசு தொழிலை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை ஆகும்.
இதனை கவனத்திற்கு கொண்டு வந்தேன். இதில் எந்த அரசியல் காரணமும் இல்லை. தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் திமுக மற்றும் சில அமைப்புகள் போராட்டம் நடத்தியது என்று தெரிவித்தார். கடந்த வாரத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து விருதுநகரில் தங்கம் தென்னரசு தலைமையில் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.