எம்எல்ஏக்களுக்கு கார்.. திரும்ப பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

mla-car-facility-cm-vijay-ammk-ttv-dinakaran
எம்எல்ஏக்களுக்கு கார்.. திரும்ப பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனம், ஓட்டுநர், மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகை மற்றும் உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜயின் அறிவிப்புக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்த வாகனங்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவது தேவையற்ற செலவு என விமர்சித்துள்ளார்.

மேலும், தவெக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்துக்கு தேர்வான சிலர், முதலமைச்சர் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்தவர்கள் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு வாகனம் வழங்க வேண்டும் என்றால், முதலமைச்சர் தனது சொந்தப் பணத்திலோ அல்லது கட்சி நிதியிலோ வழங்கலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு கடுமையான நிதிச்சுமையில் இருப்பதாகக் கூறிவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிருக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு உருளைகள், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

"மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன்" என்று கூறிய முதலமைச்சர், தற்போது அதே மக்களின் வரிப்பணத்தில் பல நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்குவது எப்படி நியாயமாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எனவே, தேவையுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் அல்லாமல் தனிப்பட்ட முறையிலோ அல்லது கட்சி நிதியிலோ வாகனங்கள் வழங்கலாம் என்றும், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு செலவில் வாகனம் வழங்கும் அறிவிப்பை முதலமைச்சர் விஜய் திரும்பப் பெற வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.