எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு? - சீமான் கேள்வி

mla-s-car-facility-ntk-seeman
எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு? - சீமான் கேள்வி

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் இலவச கார், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜயின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய சூழலில், அரசின் நிதியை பயன்படுத்தி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்குவது தேவையற்ற செலவு என விமர்சித்துள்ளார்.

கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு வாகனம் வழங்கினால் அதில் நியாயம் இருப்பதாக கூறிய சீமான், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே சொந்தமாக வாகனம் வைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு காருக்கு குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் என கணக்கிட்டாலும், அனைத்து உறுப்பினர்களுக்கும் வாகனம் வாங்க பல கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், இதனுடன் ஓட்டுநர், உதவியாளர் ஊதியம், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளும் அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எம்எல்ஏக்களுக்கு ஊதியம் மற்றும் பல்வேறு படிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழக அரசு கடன் சுமையில் இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாகனச் செலவுக்கு மட்டும் எவ்வாறு நிதி கிடைக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்பட்டால், ஆட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் எவ்வாறு விமர்சிப்பார்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். இது அரசை எதிர்த்து பேசாமல் இருப்பதற்கான மறைமுக கையூட்டாக மாறிவிடுமா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

விவசாயிகளின் விளைபொருட்களை பாதுகாக்க போதிய கிடங்கு வசதிகள் இல்லாத நிலையில், அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காமல் எம்எல்ஏக்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்குவது ஏன் என்றும் சீமான் கேட்டுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களை கைவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.