மனைவியைத் தாக்கி சித்ரவதை - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு.
கஜானா காலி.. எப்படி கார் தர முடியும்? - திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலன் கேள்வி!
"கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும். தேர்தல் வேட்புமனுவில் கார் இருப்பதாக தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கக் கூடாது." என திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவித்தார். வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப்படியும், தங்களது அலுவலகப் பணிகளுக்காக உதவியாளர் ஒருவரை நியமித்துக்கொள்வதற்கு ஊதியமாக மாதந்தோறும் ரூ. 25,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக மருத்துவர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எழிலன் நாகநாதன், "கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்கலாம். தேர்தல் வேட்புமனுவில் கார் இருப்பதாக தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கக் கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய மருத்துவர் எழிலன், "மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை கலைஞர் தான் முதலில் தொடங்கி வைத்தார். 2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் மட்டும் 25 லட்சம் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் வரம்பை ரூ.5 லட்சமாக திமுக ஆட்சிதான் உயர்த்தியது. 2,000க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு காப்பீட்டு திட்டத்தை திமுக அரசு விரிவாக்கம் செய்தது. 2,000 மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டத்தை திமுக அரசு விரிவாக்கம் செய்தது.
பட்ஜெட்டில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீடுக்கு ரூ.1,400 கோடிதான் ஒதுக்கி இருக்கிறீர்கள். இப்போது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தும்போது காப்பீடு நிறுவனத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை ரூ.4,000 கோடியாக உயர்கிறது. இது எப்படி சாத்தியம்?
முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டுள்ள மூன்று அறிவிப்புகளும் கவர்ச்சிக்கான அறிவிப்புகள் ஆகும். இவை விளம்பரத்திற்காகவும், செய்திகளில் இடம் பெறுவதற்காகவும் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும்." எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.