இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
ஏ.ஐ. கேமராக்கள் மூலம் அபராதம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கோயம்புத்தூர் எல்லையைத் தாண்டி கேரளாவிற்குச் செல்லும்போது, சீட் பெல்ட் போடுவது, தலைகவசம் அணிவது, வேகக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பது என அடியோடு மாறுகிறார்கள் டிரைவர்கள். ஏனெனில் ஏஐ கேமரா அங்கு அதிகம். இப்படி தொடர் கண்காணிப்பு கேமராக்கள் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் வாகனம் இயக்குகிறார்கள். அப்படியான சிஸ்டம் தமிழ்நாட்டில் வரப்போகிறது. வரும் 2027-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு ஏ.ஐ. கருவிகள் மூலம் அபராதம் விதிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை ஆகிய மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்து பேசுகையில், "38 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் இந்த ஆண்டிலேயே அமைக்கப்படும். ஒவ்வொரு பள்ளி வகுப்பு 'பீரியடிலும்' இருந்து 10 நிமிடங்களை எடுத்து, அதை தினமும் விளையாட்டுக்கென்று அளித்து மாணவ, மாணவிகளை தினமும் ஒரு மணிநேரம் விளையாட வைக்க வேண்டும்.
விளையாட்டில் சிறந்த குழந்தைகளுக்கு வெளிநாடுகளில் உள்ளதுபோல் சிறப்பு கல்வித் திட்டத்தை கொண்டு வர அமைச்சரிடம் கேட்டுள்ளோம். ஒலிம்பிக் மையங்கள், தமிழகத்தில் கிடையாது. விளையாட்டு விடுதிகளையும் உலகத்தரத்திற்கு உயர்த்த வேண்டும். சிறு வயதில் நான் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அதே மின்விசிறி, இரும்பு கட்டில்தான் அங்கு இருந்தது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஒடிசா அரசுதான். பணத்தை அள்ளிக் கொடுத்தனர். குழந்தையில் இருந்தே இயற்கையாகவே நீச்சல் கற்றுக்கொள்ளும் தூத்துக்குடி, நாகை போன்ற இடங்களில் நீச்சல் அகாடமியை உருவாக்கினால், அங்குள்ள தகுதியானவர்களை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வைக்க முடியும். இயற்கையாகவே விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்க முடியும்.
அரசியல் பார்க்காமல் அடுத்த பத்து ஆண்டுகள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒலிம்பிக் கனவை உருவாக்க வேண்டும். அவரவர் தொகுதிகளில் விளையாட்டு போட்டிகளை மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் 70 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலைகளை அரசு பராமரித்து வருகிறது. மாவட்டங்களை இணைக்கும் சாலைகளில் கவனம் செலுத்தப்போகிறோம். அதுபோல சாலை பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஏனென்றால், தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 18 ஆயிரம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இந்தியாவிலேயே இதுதான் அதிகம்.
கேரளாவில் சாலை பாதுகாப்புத் திட்டம் நல்ல முறையில் அமல்படுத்தப்படுகிறது. அங்கு கேமராக்களை பொருத்தி, சாலை விதிகளை மீறி வேகமாக செல்லும் வாகனங்களுக்கு உடனே அபராதம் விதிக்கப்பட்டுவிடுகிறது. விதிகளுக்கு உட்பட்டு, மணிக்கு 80 அல்லது 90 கி.மீ. வேகத்தில்தான் போக வேண்டும். இங்கு நாம் 180 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்கிறோம்.
எனவே வரும் 2027-ம் ஆண்டு முதல் தமிழகத்திலும் 70 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கருவிகளை பொருத்தி, விதிகளை மீறி அதிவேகமாக செல்வோருக்கு அபராதம் வசூலிக்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்.
மேலும், எல் அண்டு டி மற்றும் டாடா போன்ற நிறுவனங்களைப் போல 30 மாடிகள் வரை கட்டுமானத்தை மேற்கொள்ளும் வகையில் துறையை மேம்படுத்த உத்தேசித்துள்ளோம். அந்த வகையில் தனியாருக்கும் பொதுப்பணித் துறை, கட்டிடங்களை கட்டித் தரும் அளவுக்கு கொண்டுவரப்படும்" இவ்வாறு கூறினார்.