பாஜகவில் அதிருப்தி - தவெக பக்கம் நகரும் முடிவில் சரத்குமார்?

bjp-sarathkumar-tvk-cm-vijay
பாஜகவில் அதிருப்தி - தவெக பக்கம் நகரும் முடிவில் சரத்குமார்?

சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த சரத்குமாருக்கு, இதுவரை தேசிய அளவிலான பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து சரத்குமார், தவெக பக்கம் நகரலாமா அல்லது மீண்டும் தனது கட்சியை தொடங்கலாமா என்று ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு நடிகர் சரத்குமார் பாஜகவில் ஐக்கியமாகினார். இதன்பின் விருதுநகர் தொகுதியில் சரத்குமார் மனைவி ராதிகாவுக்கு பாஜக தரப்பில் சீட் கொடுக்கப்பட்டது. இதன்பின் சரத்குமார் பாஜகவில் பெரிய பொறுப்புக்கு செல்வார் என்று பேச்சுகள் எழுந்தன.

அண்ணாமலையின் அழைப்பின் பெயரிலேயே சரத்குமார் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் ஐக்கியமாகினார். ஆனால் லோக்சபா தேர்தல் முடிவடைந்த ஓராண்டிற்குள் அண்ணாமலையின் பதவியே பறிபோனது. இருப்பினும் நயினார் நாகேந்திரனுடன் சரத்குமார் நெருக்கமாகவே இருந்து வந்தார். அவருக்கு தேசிய பொறுப்பு கிடைக்கும் என்று தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சட்டசபைத் தேர்தலிலும் கூட சரத்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அதேபோல் நேற்று பாஜகவில் தேசிய பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டது. அதிலும் சரத்குமார் பெயர் இடம்பெறவில்லை. இதனை முன்கூட்டியே சரத்குமார் அறிந்திருந்ததாக சொல்லப்படுகிறது,

இதன் காரணமாகவே தனது ரசிகர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியை சரத்குமார் நடத்தி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் தான் நாட்டாமை குடும்பம் என்று ரசிகர்கள் பச்சை குத்தி கொள்ள அறிவுறுத்தி இருந்தார். தற்போது பாஜகவில் சரத்குமாருக்கு பெரியளவில் மரியாதை அளிக்கப்படாத சூழலில், தவெக பக்கம் நகரலாமா என்று ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு நடிகை ராதிகாவுக்கும் விஜய்க்கும் இடையிலான நெருக்கமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒருவேளை தவெகவில் இணையும் திட்டம் அரங்கேறவில்லை என்றால், மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கும் எண்ணத்திற்கு சரத்குமார் வந்துவிட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இன்னும் ஓரிரு மாதங்கள் இதுதொடர்பாக சரத்குமார் இறுதி முடிவை எடுப்பார் என்று தெரிகிறது.

இதனிடையே நயினார் நாகேந்திரன் மூலமாக சரத்குமாரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடக்கலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.