சென்ட்ரல்- கத்திப்பாரா- கோயம்பேட்டை இணைக்கும் புதிய சாலை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

chennai-central-katthipara-koyembedu-new-joint-road-minister-adhav-arjuna
சென்ட்ரல்- கத்திப்பாரா- கோயம்பேட்டை இணைக்கும் புதிய சாலை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

மானிய கோரிக்கையில் பேசிய பொது பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை மாநகராட்சி சாலைகளை மாநில நெடுஞ்சாலை துறை பராமரிக்கும் என அறிவித்த அவர், ரூ.400 கோடியில் சென்னை சென்ட்ரல்- கத்திப்பாரா- கோயம்பேட்டை இணைக்க முக்கோண வழித்தட சாலை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சட்டசபையில் தனது துறை சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திருவிக பாலம் வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அறிவித்த ஆதவ் அர்ஜுனா, ரூ.400 கோடியில் சென்னை சென்ட்ரல்- கத்திப்பாரா- கோயம்பேட்டை இணைக்க முக்கோண வழித்தட சாலை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். சென்னை மாநகராட்சி சாலைகளை மாநில நெடுஞ்சாலை துறை பராமரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை - குமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, 8 வழிச்சாலைக்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் சென்னை, கோவை, தூத்துக்குடியை இணைக்கும் தொழில் தட சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் முதல் பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை படகு போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். மேலும், சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்க தமிழ்நாடு நெடுஞ்சாலை பெருந்திட்டம் 2036 தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.