CM விஜய் முக்கிய அறிவிப்பு - இனிமேல் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு ரூபாய்..
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வர் விஜய் பேசுகையில், "முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்குத் தற்போது உள்ள ஐந்து லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்படும்.
திருநங்கையர்களுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய் 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை தலைமை மையம் அமைக்கப்படும். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.84 கோடியில் 8 தளங்களுடன் மண்டல புற்று நோய் மையம் அமைக்கப்படும். பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.106.17 கோடி ஒதுக்கப்படும்.
7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 660 பி.எஸ்.சி செவிலியர் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1,925 மாணாக்கர் இடங்கள், பிசியோதெரபி உள்ளிட்ட 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.மேலும் 5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும்" என அறிவித்தார்.
முதல்வர் விஜய்யின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் வன்னியரசு பேசுகையில், "வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை இன்று முதலைமைசர் அறிவித்துள்ளார். மருத்துவ காப்பீடு ஐந்து லட்சம் முதல் 25 லட்ச ரூபாய் அதிகரித்தது வரவேற்கத்தக்கது. வடசென்னை மக்கள் குளிர்ந்து போகும் அளவிற்கு திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. மன நிறைவோடு இந்த அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்துள்ளார். பால் கொள்முதல் மற்றும் கார் போன்ற அறிவிப்புகள் சிறப்புமிக்க அறிவிப்பு.
விழுப்புரம் பகுதியில் அதிக புற்றுநோய் பாதிப்பு உள்ளது. எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தொடர்ந்து இந்த பிரச்சனைகள் குறித்து மன்றத்தில் பேசியுள்ளார். அதற்கான நிரந்தர முடிவு கிடைக்கவில்லை. தற்போது முதலமைச்சர் கேட்காமலேயே இந்த மருத்துவ காப்பீடை அதிகரித்துள்ளார். மகத்தான திட்டங்களை முதலமைச்சராக அறிவித்துள்ளார். இதனை விசிக வரவேற்கிறது" என்று தெரிவித்துள்ளார்.