இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
நீட் விவகாரம்: அதிமுக மோடியிடம் கேட்க தைரியம் இருக்கிறதா? - மாணிக்கம் தாகூர்
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்த வரலாற்றுப் பொறுப்பில் இருந்து அதிமுக தப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் நீட் தேர்வு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவில்லை என்றும், அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் 2017ஆம் ஆண்டு நீட் தேர்வு மாநிலத்தில் நடைமுறைக்கு வந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கான பொறுப்பை காங்கிரஸ் மீது சுமத்த முயற்சிப்பது உண்மையை மறைக்கும் முயற்சி என அவர் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுகளை பாதித்தது காங்கிரஸ் அல்ல, பாஜகவுடன் இணைந்து செயல்பட்ட அதிமுக அரசுதான் என்றும் அவர் கூறினார். ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப முடிவுகளை மாற்றிக்கொள்ளும் அரசியல் அணுகுமுறையை காங்கிரஸ் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டதன் விளைவாக வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் பயிற்சி மையங்களின் ஆதிக்கம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனால் தேர்வு முறை மாணவர்களின் திறமையை மதிப்பிடும் கருவியாக இல்லாமல், வணிகமயமான அமைப்பாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.
அனிதா உள்ளிட்ட பல மாணவர்களின் உயிரிழப்புகள் மாநில மக்களின் மனதில் இன்னும் ஆழமான வேதனையை ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர், நீட் விலக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது என்றும் தெரிவித்தார். எந்த மாநிலம் நீட் தேர்விலிருந்து விலக்கு கோருகிறதோ, அந்த மாநிலத்தின் விருப்பத்தை மதிக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கருத்து என கூறினார்.
இறுதியாக, பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த தயாரா என்றும், பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்து நேரடியாக கேள்வி எழுப்பும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா என்றும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.